உடல்நலக்குறைவால் கூலித்தொழிலாளி சாவு பொதுமக்கள் போராட்டம்
திருவள்ளூர் அருகே உடல்நலக்குறைவால் கூலித்தொழிலாளி உயிரிழந்தார். இறுதிச்சடங்கில் அவரது மனைவி கலந்துகொள்ள வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் காலனியை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 26). கூலித்தொழிலாளி. சுரேந்தர் தன் வீட்டின் எதிர்வீட்டை சேர்ந்த கலையரசி (20) என்ற பெண்ணை கடந்த 10 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். கலையரசி 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுரேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் கலையரசி தனது பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார். அவர் அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்று வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு கலையரசி தனது கருவை கலைத்ததாக கூறப்படுகிறது.
போராட்டம்இந்நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். சுரேந்தர், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது, இறந்தபோதும் அவரை கலையரசி மருத்துவமனைக்கு சென்று பார்க்கவில்லை என தெரிகிறது.
இதைத்தொடர்ந்து நேற்று சுரேந்தர் உடல் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது. அப்போது அக்கிராமத்தை சேர்ந்த சுமார் 500–க்கும் மேற்பட்டோர் அவருக்கு இறுதி சடங்குகள் செய்யவும், இறந்த சுரேந்தரின் உடலை பார்க்கவும், கலையரசி வர வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடல் அடக்கம்இதனால், அப்பகுதியில் இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து அங்கு திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
அப்போது போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சுரேந்தர் உடல் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, அங்கிருந்த ஒரு குடிசைக்கு சிலர் தீ வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.