குடியிருப்புகள் மத்தியில் மாணவர் விடுதி கட்ட எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை
கும்மிடிப்பூண்டி அருகே குடியிருப்புகள் மத்தியில் அரசு மாணவர் விடுதி கட்டிடத்தை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். பின்னர் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டியை அடுத்த கோட்டக்கரை பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அரசு ஆஸ்பத்திரி, கால்நடை ஆஸ்பத்திரி, கல்வித்துறை சார்ந்த அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. மேற்கண்ட கோட்டக்கரை பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் பின்புறம் 12 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதனை தற்போது இந்த பகுதி மக்கள் விளையாட்டு மைதானமாகவும், அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் வாகனங்களின் நிறுத்தமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த இடத்தின் அருகே இந்த பகுதி மக்களின் நீர் ஆதாரமாக 1 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் உள்ளது.
மேற்கண்ட 12 சென்ட் அரசு புறம்போக்கு இடமானது தற்போது ஆதிதிராவிட நலத்துறைக்கு மாற்றப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் ரூ.1 கோடியே 7 லட்சம் செலவில் ஆதி திராவிட மாணவர்களுக்கான விடுதியை கட்ட அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இந்த இடத்தில் மாணவர் விடுதியை கட்டக்கூடாது என ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் இந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். 2006–ம் ஆண்டு முதல் மேற்கண்ட அரசு புறம்போக்கு இடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கிட கோரி போராட்டம் நடத்தி வருவதாகவும், குடியிருப்புகள் மத்தியில் விடுதி கட்டும்போது மையப்பகுதியான இங்கு போக்குவரத்து பிரச்சினை ஏற்படும். மேலும் அருகே உள்ள மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டி பழுது அடைந்தாலும், உடனடியாக மாற்று இடம் தேடி பிடித்து அதனை கட்ட முடியாது. எனவே இந்த பகுதி மக்களின் நலனுக்காக மேற்கண்ட இடத்தை காலியாகவே வைத்திருக்க வேண்டும் என்றும் மேற்கண்ட அரசு புறம்போக்கு இடத்தை கோட்டக்கரை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கி தர வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் அப்போது பொதுமக்கள் வலியுறுத்தினர்.
பொதுமக்கள் எதிர்ப்புஇந்த நிலையில், நேற்று மீண்டும் அந்த பகுதிக்கு வந்த அரசுத்துறை அதிகாரிகள், மேற்கண்ட கட்டிட கட்டுமான பணிக்கான முதல் கட்ட வேலைகளை தொடங்கினர். இதை அறிந்த கோட்டக்கரையை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். இந்த இடத்தில் மாணவர் விடுதியை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் ஸ்ரீதரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன், இன்ஸ்பெக்டர் சுடலைமணி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இது அரசின் திட்டம். அரசுக்கு சொந்தமான இடத்தில் பொது விஷயத்திற்காக செயல்படுத்தப்படும் திட்டத்தை யாரும் தடுத்து நிறுத்தக்கூடாது என்று தாசில்தார் ஸ்ரீதரன் அந்த பகுதி மக்களிடம் திட்ட வட்டமாக கூறினார்.
கூடுதல் செலவுமேலும் இந்த மாணவர் விடுதி கட்டுவதற்காக முதன் முதலில் 2005–ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையானது ரூ.31½ லட்சம். தற்போது தேவையில்லாத காலதாமதத்தால் ரூ1 கோடியே 7 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்க வேண்டிய அவசிய நிலை வந்து உள்ளது. இதனால் கட்டிட கட்டுமான பணி தொடர்பாக அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது. தேவையில்லாமல் அரசு திட்டத்தை தடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்று அதிகாரிகள் கூறினர்.
இதனையடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே போதிய இடம் விட்டு சற்று தள்ளி கட்டிடம் கட்ட அந்த பகுதி மக்கள் சம்மதம் தெரிவித்தனர்.