லஞ்சம் வாங்கிய நில அளவையருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை கோர்ட்டு தீர்ப்பு


லஞ்சம் வாங்கிய நில அளவையருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 14 Jun 2017 3:45 AM IST (Updated: 14 Jun 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

லஞ்சம் வாங்கிய நில அளவையருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தாமரைக்குளம்,

அரியலூர் மாவட்டம் மணக்கால் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 34). விவசாயி. இவர், தனது குடும்பத்துக்கு சொந்தமான நிலங்களின் கூட்டுப்பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற அரியலூர் நில அளவையர் அலுவலகத்தில் கடந்த 2007-ம் ஆண்டு விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில் நிலத்தை அளந்து தனிப்பட்டா வழங்க வேண்டும் எனில் ரூ.2,000-ஐ லஞ்சமாக தர வேண்டும் என அரியலூர் நில அளவையர் புகழேந்தி (63), கண்ணதாசனிடம் கேட்டார். ஆனால் லஞ்சம் தர விரும்பாத கண்ணதாசன் இதுகுறித்து அரியலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் அறிவுறுத்தலின் பேரில் 4-10-2007 அன்று அரியலூர் நில அளவையர் அலுவலகத்தில் வைத்து ரூ.2,000-ஐ லஞ்சமாக புகழேந்தியிடம் கண்ணதாசன் கொடுத்தார்.

சிறை தண்டனை

அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக புகழேந்தியை பிடித்தனர். இதையடுத்து லஞ்சம் வாங்கிய புகழேந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அரியலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ரவி நேற்று தீர்ப்பு கூறினார். அதில், லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக புகழேந்திக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அதனை தொடர்ந்து போலீசார் புகழேந்தியை வேனில் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Related Tags :
Next Story