குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 14 Jun 2017 4:30 AM IST (Updated: 14 Jun 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலத்தை அடுத்த அத்திமலைப்பட்டு ஊராட்சி அண்ணாநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் கடந்த 3 மாதங்களாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் குடிநீர் வழங்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதனால் ஆத்திரம் அடைந்த அண்ணாநகர் பொதுமக்கள் நேற்று காலை 8 மணியளவில் குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் வேலூர்-ஆரணி பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், மேற்கு ஆரணி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

குடிநீர் வழங்க ஏற்பாடு

அப்போது பொதுமக்கள் மலையடி வாரத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள மின்மோட்டாரை அப்புறப்படுத்தி ஆழப்படுத்த வேண்டும். அல்லது அதன் அருகே புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு அதிகாரிகள் ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்தி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் மறியல் காரணமாக அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் காலையில் பள்ளிக்கு மாணவ-மாணவிகள் உரிய நேரத்திற்குள் செல்ல முடியாமல் தவிப்புக்குள்ளாயினர்.

பல்வேறு தரப்பினருக்கு பாதிப்பு...

மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் கூறுகையில், “பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து தீர்த்து கொள்ள வேண்டும். சாலை மறியலில் ஈடுபடுவது தேவையில்லாதது. அதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், உயிருக்கு போராடும் நோயாளிகள், வேலைக்கு செல்லும் அலுவலர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்படுவார்கள். எனவே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்” என்றார்.


Related Tags :
Next Story