மதிப்பெண் குறைந்ததால் 10–ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது


மதிப்பெண் குறைந்ததால் 10–ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 13 Jun 2017 10:30 PM GMT (Updated: 13 Jun 2017 9:28 PM GMT)

தானேயில் மதிப்பெண் குறைந்ததால் 10–ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது.

தானே,

தானே, வாக்லே எஸ்டேட் பகுதியில் உள்ள சாம்பாஜி நகர் பகுதியை சேர்ந்த பெண் கோமல் பந்திவாலே(வயது 16). 10–ம் வகுப்பு மாணவியான இவர் தேர்வை முடித்துவிட்டு தன் தேர்வு மதிப்பெண்ணை அறிந்துகொள்ள ஆர்வத்துடன் காத்திருந்தார். இந்த நிலையில் நேற்று 10–ம் வகுப்பு முடிவுகள் வெளியானது. இதில் கோமல் பந்திவாலே 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தார்.

ஆனால் இது அவருக்கு மகிழ்ச்சி தரவில்லை. அவர் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்று நினைத்திருந்தாக தெரிகிறது. இதனால் அவர் சோகத்துடன், முகம் வாடிய நிலையிலேயே காணப்பட்டார்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கோமல் பந்திவாலே தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வீட்டில் நடத்திய சோதனையில் அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. இதில், ‘‘நான் 85 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவேன் என கருதியிருந்தேன். ஆனால் என்னுடைய மதிப்பெண் திருப்தி அளிக்காததால் இந்த விபரீத முடிவை தேடிக்கொள்கிறேன் ’’ என்று கூறியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் தன் தங்கையிடம் எப்படியாவது 10–ம் வகுப்பில் 85 மதிப்பெண் பெற்று என் கனவை நிறைவேற்று என்று கூறியிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story