தேசத்தை உயர்த்தும் திட்டங்களை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார்
தேசத்தை உயர்த்தும் திட்டங்களை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் என்று ஈரோட்டில் நடந்த கருத்தரங்கில் ராஜஸ்தான் மாநில மந்திரி பேசினார்.
ஈரோடு,
பா.ஜனதா கட்சியின் தலைமையில் பிரதமர் மோடி பதவி ஏற்று 3 ஆண்டு நிறைவையொட்டி மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை மத்திய அரசு நடத்தி வருகிறது.
அதன்படி ஈரோட்டில் நேற்று ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஈரோடு எஸ்.செல்வகுமார சின்னையன் எம்.பி. தலைமை தாங்கினார். ராஜஸ்தான் மாநில கிராமப்புற மற்றும் நகர்ப்புற துணை மந்திரி ராஜேந்திர சிங் ரத்தோர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
உயர்த்தும் திட்டங்கள்இந்திய தேசத்தை உயர்த்தும் திட்டங்களை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார். அவர் ஆட்சிப்பொறுப்பு ஏற்றதில் இருந்தே அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற கோஷத்தை முன்வைத்து ஆட்சியை நடத்தி வருகிறார்.
தேச பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. அடித்தட்டு மக்களுக்கும் அனைத்து உதவிகளும் கிடைக்கச்செய்து உள்ளார். 30 கோடி பேருக்கு வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டு, அரசின் நல நிதிகள் நேரடியாக கிடைக்கச்செய்து உள்ளார். 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்வசதி ஏற்படுத்திக்கொடுத்து உள்ளார்.
இவ்வாறு ராஜஸ்தான் மாநில மந்திரி ராஜேந்திர சிங் ரத்தோர் கூறினார்.
சிறப்பான ஆட்சிநிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட பா.ஜனதா தலைவர் சிவசுப்பிரமணியம், முன்னாள் தலைவர் பொன்.ராஜேஸ்குமார், மாநில வக்கீல் அணி தலைவர் என்.பி.பழனிச்சாமி, இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் பூசப்பன், மாவட்ட தலைவர் ஜெகதீசன், பா.ஜனதா ஈரோடு மாவட்ட மக்கள் தொடர்பாளர் கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கம் ஏற்பாடுகளை நெய்வேலி நிலக்கரி கழகம் (என்.எல்.சி.) நிறுவனம் செய்து இருந்தது.
முன்னதாக நிருபர்களிடம் பேசிய ராஜஸ்தான் மந்திரி ராஜேந்திர சிங் ரத்தோர் கூறும்போது, 3 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. பிரதமர் மோடி நீண்ட தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். நாட்டை வலுவான பாதையில் கொண்ட செல்லவும், ஏழை–எளியவர்களின் மேம்பாட்டுக்காகவும் சமூக பாதுகாப்பு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.