தலைமை ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி முற்றுகை பெற்றோர்கள் சாலை மறியல்


தலைமை ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி முற்றுகை பெற்றோர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 Jun 2017 3:17 AM IST (Updated: 14 Jun 2017 3:17 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளியை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

கண்டமனூர்,

ஆண்டிப்பட்டி அருகேயுள்ள ராஜதானியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக மதுரை மாவட்டம் கொக்குளத்தை சேர்ந்த சிவராமபாண்டியன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இங்கு 365 மாணவ– மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் தலைமை ஆசிரியரை மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு பள்ளிக்கு இடமாற்றம் செய்தனர். இதையடுத்து ராஜதானி அரசு கள்ளர் பள்ளிக்கு திண்டுக்கல்லில் இருந்து கார்த்திகேயன் என்பவர் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெற்றோர்– ஆசிரியர் கழக நிர்வாகிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்று பெற்றோர்– ஆசிரியர் கழகத்தினர் கூறினர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

சாலை மறியல்

இதே போல் கூடலூர் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்டியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு 240 மாணவ– மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்த பள்ளியில் 11 மற்றும் 12–ம் வகுப்புகளில் பணியாற்றிய 7 ஆசிரியர்களில் 4 பேர் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அதற்கு பதிலாக வேறு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தற்போது 3 ஆசிரியர்கள் மட்டும் மேல்நிலை வகுப்புகளில் பாடம் கற்று தருகின்றனர். அவர்களில் கணித ஆசிரியர் நாகரத்தினம் என்பவரை தற்போது வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. அவருக்கு பதிலாக ஆசிரியர் நியமிக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மாணவ– மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கருநாக்கமுத்தன்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பெஞ்சமின் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்கவேண்டும். மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அப்போது பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்கவும், அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்களும், பெற்றோர்களும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story