டிராக்டர் மோதி பள்ளி மாணவன் படுகாயம்: மணல் லாரிகளை சிறைப்பிடித்த கிராம மக்கள்


டிராக்டர் மோதி பள்ளி மாணவன் படுகாயம்: மணல் லாரிகளை சிறைப்பிடித்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 13 Jun 2017 9:47 PM GMT (Updated: 13 Jun 2017 9:47 PM GMT)

டிராக்டர் மோதி பள்ளி மாணவன் படுகாயம்: மணல் லாரிகளை சிறைப்பிடித்த கிராம மக்கள்

போடி

போடி அருகே மணல் அள்ளி வந்த டிராக்டர் மோதி பள்ளி மாணவன் படுகாயம் அடைந்தான். இதனால் மணல் லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.

மாணவன் படுகாயம்

போடி அருகே உள்ள குப்பனாசாரிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகன் யுவன் (வயது 7). போடியில் உள்ள தனியார் பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வருகிறான். தினமும் வேனில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினம் மாலையில் பள்ளி முடிந்து வேனில் திரும்பிய யுவன் குப்பனாசாரிபட்டி பஸ்நிறுத்தம் அருகே இறங்கினான். பின்னர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தான்.

அப்போது பொட்டிப்புரம் புதுக்கோட்டை கிராமத்தில் இருந்து மணல் அள்ளி வந்த டிராக்டர் யுவன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லாரிகள் சிறைபிடிப்பு

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் அப்பகுதியில் மணல் அள்ளி வந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போடி தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மணல் அள்ளி செல்லும் டிராக்டர், லாரிகளை வேகமாக ஓட்டி செல்லக்கூடாது என்று வலியுறுத்தினர்.

இதற்கிடையே பள்ளி மாணவன் மீது மோதிய டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் தேனி பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த சதீஸ்குமார் (27) என்பவரை கைது செய்து இருப்பதாகவும், லாரிகளையும், டிராக்டர்களையும் வேகம் குறைவாக இயக்க அறிவுறுத்தப்படும் என்றும் போலீசார் கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


Next Story