பெங்களூருவில் தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 13 பேர் கைது ரூ.74½ லட்சம் பொருட்கள் மீட்பு


பெங்களூருவில் தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 13 பேர் கைது ரூ.74½ லட்சம் பொருட்கள் மீட்பு
x
தினத்தந்தி 14 Jun 2017 3:40 AM IST (Updated: 14 Jun 2017 3:40 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், தங்க சங்கிலி பறிப்பு, திருட்டு, மோசடியில் ஈடுபட்டு வந்ததாக தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.74½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டன.

பெங்களூரு,

பெங்களூருவில் தங்க சங்கிலி பறிப்பு, திருட்டு மற்றும் மோசடியில் ஈடுபட்டதாக 13 பேரை வடக்கு மண்டல போலீசார் கைது செய்தனர். இதன்மூலம், 51 வழக்குகளுக்கு தீர்வு கண்டனர். கைதானவர்களிடம் இருந்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்பட ரூ.74½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டன.

மல்லேசுவரம் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த பொருட்களை பெங்களூரு மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரவீன் சூட், வடக்கு மண்டல துணை போலீஸ் கமி‌ஷனர் லாபுராம் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். பின்னர், பிரவீன் சூட் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

இரானி கும்பல்

பெங்களூருவில் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்ததாக இரானி கும்பலை சேர்ந்த தார்வார் ஜன்னத் நகரில் வசித்து வரும் முகமது என்ற அலி (வயது 32), ‌ஷகென்பா என்ற லாலு (28) ஆகியோரை ஜாலஹள்ளி போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 502 கிராம் எடை கொண்ட 15 தங்க சங்கிலிகள், ஒரு மோட்டார் சைக்கிள் என ரூ.15½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டன. இதன்மூலம் பெங்களூருவில் பதிவான 15 தங்க சங்கிலி பறிப்பு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இதேபோல், தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட பெங்களூரு கண்ணுரும்மா லே–அவுட்டை சேர்ந்த முபாரக் (22), அஜித் (20) ஆகியோரை சஞ்சய்நகர் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 60 கிராம் எடை கொண்ட 3 தங்க சங்கிலிகள் ஒரு மோட்டார் சைக்கிள் என ரூ.2.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன. இவர்கள் 2 பேரும் 3 தங்க சங்கிலி பறிப்புகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்தவர் கைது

மேலும், தமிழ்நாடு, ஐதராபாத் மற்றும் பெங்களூருவில் திருட்டில் ஈடுபட்ட லக்கெரேயை சேர்ந்த குமார் அக்‌ஷய் (24), துமகூரு மாவட்டம் பாவகடா தாலுகா பாலமனா கிராமத்தை சேர்ந்த பாலாஜி நாயக் (24) ஆகியோரை மல்லேசுவரம் போலீசார் கைது செய்து 14 திருட்டு வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ஒரு பைக், ஒரு ‘ட்ரோன் கேமரா‘, 12 கேமராக்கள் என ரூ.26.63 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டன.

இதுபோல், மல்லேசுவரம் வேணுகோபால்சாமி கோவிலில் புனரமைப்பு பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்துவிட்டு வெள்ளிப்பொருட்களை திருடி சென்றதாக தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரீஷ் (23) என்பவரை மல்லேசுவரம் போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து ரூ.4½ லட்சம் மதிப்பிலான 9½ கிலோ வெள்ளிப்பொருட்கள் மீட்கப்பட்டன.

கம்ப்யூட்டர்கள், மடிகணினிகள் பறிமுதல்

அத்துடன், பெங்களூருவில் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டதாக ஆர்.டி.நகரை சேர்ந்த சுரேஷ் (27) என்பவரை ஆர்.டி.நகர் போலீசார் கைது செய்து 2 வழக்குகளுக்கு தீர்வு கண்டனர். இவரிடம் இருந்து ரூ.3.64 லட்சம் மதிப்பிலான 130 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டது.

மேலும், பெங்களூரு பல்லாரி ரோட்டில் உள்ள கம்ப்யூட்டர் விற்பனை மைய உரிமையாளரை ஏமாற்றி மடிக்கணினி, கம்ப்யூட்டர்களை வாங்கி மோசடி செய்ததாக ஜே.ஜே.நகரை சேர்ந்த சையத் (28), ஜானகிராம் லே–அவுட்டை சேர்ந்த சைப் பாஷா (22) ஆகியோர் ஆர்.டி.நகர் போலீசாரிடம் சிக்கினர். இவர்களிடம் இருந்து 60 மடிக்கணினிகள், 60 கம்ப்யூட்டர்கள் என ரூ.14.45 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன.

மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

அதேபோல், மோட்டார் சைக்கிள்கள் திருடி வந்ததாக பாகலகுண்டேவை சேர்ந்த ராகுல் (19), அசோக் குமார் (25) ஆகியோரை சோழதேவனஹள்ளி போலீசார் கைது செய்து 7 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.3.10 லட்சம் மதிப்பிலான 7 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.

இதேபோல், பெங்களூருவில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக சிங்காமராவை சேர்ந்த லட்சுமணா (19) என்பவரை பாகலகுண்டே போலீசார் கைது செய்து 8 வழக்குகளுக்கு தீர்வு கண்டனர். இவரிடம் இருந்து ரூ.4½ லட்சம் மதிப்பிலான 8 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story