புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பூர் மணியக்காரம்பாளைய பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருப்பூர்,
திருப்பூர் மணியக்காரம்பாளையம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்திருப்பூர் மணியக்காரம்பாளையம் பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் தனியார் இடத்தில் புதிய டாஸ்மாக் கடை ஒன்று நேற்று திறக்கப்பட்டது. ஏற்கனவே அந்த பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வரும் நிலையில் மேலும் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் கடையை உடனடியாக மூடக்கோரி அங்கு உள்ள பொதுமக்கள் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று காலை நூற்றுக்கு மேற்பட்டோர் அந்த பகுதியில் கூடினார்கள். பின்னர் அங்கு புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மணியக்காரம்பாளையம் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:–
நடவடிக்கை எடுக்கக்கோரிக்கைகுடியிருப்புகள் நிறைந்த இந்த பகுதியின் 100 மீட்டர் தூரத்தில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடியிருப்பு பகுதிகளின் நடுவே புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவ–மாணவிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தனியாருக்கு சொந்தமான இந்த இடத்தை சுற்றிலும் சுமார் 100–க்கும் மேற்பட்ட வீடுகள் இருப்பதால் எங்கள் பகுதியில் உள்ளவர்கள் மிகவும் அச்சத்திலேயே உள்ளனர். இதனால் இந்த கடையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கலெக்டர் அலுவலகத்தில் மனுசாலைமறியல் போராட்டம் சுமார் ½ மணிநேரம் நடந்தது. இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் இந்த கோரிக்கை அடங்கிய மனு ஒன்றையும் கலெக்டர் அலுவலகத்தில் சென்று கொடுத்தனர். இதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.