அரசு மானியத்துடன் கூடிய தீவனப்பயிர் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்
அரசு மானியத்துடன் கூடிய தீவனப்பயிர் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் கால்நடை வளர்ப்போருக்கு கலெக்டர் வேண்டுகோள்
விழுப்புரம்,
அரசு மானியத்துடன் கூடிய தீவனப்பயிர் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என்று கால்நடை வளர்ப்போருக்கு கலெக்டர் சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தீவனப்பயிர் அபிவிருத்தி திட்டம்
கால்நடைகளின் வளர்ப்பிற்காக தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளாக மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசு மானியத்துடன் கூடிய தீவனப்பயிர் சாகுபடி திட்டங்கள் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.
எனவே இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை உதவி மருத்துவர் அல்லது துணை இயக்குனரை நேரில் தொடர்பு கொண்டு திட்டங்களை குறிப்பிட்டு எழுத்து மூலமாக விண்ணப்பம் அளிக்கலாம். மேலும் அனைத்து இனங்களிலும் 30 சதவீத தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினர் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.