திருப்பத்தூரில் கழிவுநீர் ஓடைகளாக மாறிய நீர்வரத்து கால்வாய்கள்


திருப்பத்தூரில் கழிவுநீர் ஓடைகளாக மாறிய நீர்வரத்து கால்வாய்கள்
x
தினத்தந்தி 13 Jun 2017 10:29 PM GMT (Updated: 13 Jun 2017 10:29 PM GMT)

திருப்பத்தூரில் கழிவுநீர் ஓடைகளாக மாறிய நீர்வரத்து கால்வாய்கள்

திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் உள்ள நீர்வரத்து கால்வாய்கள் கழிவுநீர் செல்லும் ஓடைகளாய் மாறியுள்ளன. அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நீர்வரத்து கால்வாய்கள்

திருப்பத்தூர் பெரிய கண்மாயில் இருந்து கால்வாய்கள் பிரிந்து பல பகுதிகள் வழியாக செல்கின்றன. திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பல வார்டுகளில் செல்லும் இந்த கால்வாய்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக இந்த கால்வாய்களின் தலைப்பகுதி என்று கூறப்படும் 18–வது வார்டு மற்றும் 2–வது வார்டு பகுதிகளில் மிகவும் சுகாதாரமற்ற நிலையில் கழிவுநீர் செல்லும் ஓடைகளாக மாறி உள்ளன. கண்மாயின் தெற்கு மடையான அச்சுக்கட்டு பகுதியில் இருந்து செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புகள்

மேலும் திருப்பத்தூரின் பிரதான கண்மாயாக சீதளிகுளம் உள்ளது. இந்த குளம், பெரிய கண்மாயில் இருந்து கால்வாய்கள் வழியாகவே தண்ணீர் சென்று நிரம்புவது வழக்கம். சமீபத்தில் இந்த குளத்தில் ரூ.2 கோடி செலவில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டும், கால்வாய்கள் தூர்ந்து போனதால் தண்ணீர் நிரம்புவதற்கான வழியில்லாமல் போனது. சமீபத்தில் திருப்பத்தூர் பகுதியில் தொடர்ந்து ஒரு வாரம் நல்ல மழை பெய்தது. ஆனால் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், தூர்வாராததால் பெரிய கண்மாய்க்கும், சீதளிகுளத்திற்கும் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது.

கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

தூர்வாருதல் இல்லை, ஆக்கிரமிப்புகள் ஆகியவை மட்டுமின்றி, தற்போது வீடுகளிலிருந்து வரும் கழிவுநீர் அனைத்தும் இந்த நீர்வரத்து கால்வாய்களில் தேங்கி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகிறது. காளியம்மன் கோவில் தெரு அருகே உள்ள இரட்டை கால்வாய் என்ற பகுதியில் பேரூராட்சி மூலம் பேவர்பிளாக் பதிக்கப்பட்டு இரட்டை கால்வாய், பிரிவு சாலையாக மாறியுள்ளது. அதற்கு அருகில் உள்ள காமராஜர் காலனி கால்வாய் கழிவுநீர் ஓடையாக காட்சி அளிக்கிறது. அதன் தொடர்ச்சியாக தென்மாகண்மாய் வரை செல்லும் கால்வாய்கள் தூர்வாரப்படாத நிலையில் உள்ளது.

எனவே திருப்பத்தூர் நகரில் உள்ள கால்வாய்களை பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் தூர்வாரியும், ஆக்கிரமிப்புகளை அகற்றியும் தண்ணீர் தடையின்றி செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story