மானாமதுரை பகுதியில் மணல் தட்டுப்பாட்டால் மூடப்படும் நிலையில் செங்கல் சூளைகள்
மானாமதுரை பகுதியில் மணல் தட்டுப்பாட்டால் மூடப்படும் நிலையில் செங்கல் சூளைகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழப்பு
மானாமதுரை,
மானாமதுரை பகுதியில் மணல் தட்டுப்பாட்டால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
செங்கல் சூளைகள்சிவகங்கை மாவட்டத்திலேயே மானாமதுரை தாலுகாவில் செங்கல், சித்துக்கல், ஓடு, தட்டு ஓடு தயாரிப்பு சூளைகள் அதிக அளவு உள்ளன. மழை பொய்த்து விவசாயம் பாதிக்கப்பட்டதால் விவசாய கூலி தொழிலாளர்கள் பலரும் கடந்த 5 ஆண்டுகளாக செங்கல் சூளைகளில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். செங்கல் சூளைகள் தவிர மானாமதுரையில் ஏராளமான சிறிய காளவாசல்களும் உள்ளன. செங்கல் தயாரிப்பிற்கு முக்கிய தேவையாக சவடு மணல் உள்ளது. மானாமதுரையைச் சுற்றியுள்ள கண்மாய்களில் செங்கல் தயாரிக்க தேவையான சவடு மணல் அள்ள மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து, அதன்பின்பு குறிப்பிட்ட நாட்களுக்கு சவடு மணல் அள்ள அனுமதி வழங்கப்படும்.
தொழிலாளர்கள் வேலையிழப்புஆனால் கடந்த சில ஆண்டுகளாக மணல் அள்ள அனுமதி கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இத்துடன் கண்மாய்களில் போதிய அளவு சவடு மணலும் கிடைக்கவில்லை. பசுமை தீர்ப்பாயத்தின் நிபந்தனையின் படி நிலத்தில் 3 அடி ஆழத்திற்கு மட்டும்தான் மணல் அள்ளப்பட வேண்டும். மானாமதுரை ஒன்றியத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின்கீழ் 165 கண்மாய்களும், ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டின்கீழ் 241 கண்மாய்களும் உள்ளன. இந்த கண்மாய்களில் கடந்த பல வருடங்களாக தொடர்ச்சியாக மணல் அள்ளப்பட்டதால் பெரும்பாலான கண்மாய்களில் தற்போது மணல் இல்லை. இதனால் தனியார் பட்டா நிலங்களில் சவடு மணல் அள்ள அனுமதி கேட்டு செங்கல் சூளை உரிமையாளர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். சவடு மணல் தட்டுப்பாட்டால் கடந்த சில மாதங்களாக செங்கல் சூளைகளில் பணிகள் முடங்கியுள்ளன. இதனை நம்பி வேலை பார்த்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் தற்போது வேலையின்றி தவித்து வருகின்றனர்.
வருமானம் இல்லைசெங்கல் சூளைகளின் உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தும், அவர்களின் குழந்தைகளின் கல்வி, மருத்துவம், திருமணம் போன்றவற்றிற்கு உதவி செய்து தொழிலாளர்களை பணியில் அமர்த்தி வருகின்றனர். சவடு மணல் தட்டுப்பாட்டால் வேலையின்றி இருப்பதால் தற்போது தொழிலாளர்களுக்கு உரிமையாளர்களால் உதவி செய்ய முடியவில்லை. இந்த தொழிலை நம்பியிருந்த தொழிலாளர்களும் போதிய வருமானம் இன்றி குடும்பத்தை நடத்தி வருகின்றனர். தற்போது கல்வி ஆண்டு தொடங்கிவிட்டபடியால் பல செங்கல் சூளை தொழிலாளர்கள், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் சிரமப்படுகின்றனர்.
தட்டுப்பாடின்றி மணல்சவடு மணல் அள்ள அனுமதி கேட்டு விண்ணப்பித்தால் மாவட்ட நிர்வாகம் காலதாமதம் செய்வதாகவும் செங்கல் சூளை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் செங்கல் சூளைகளுக்கு தட்டுப்பாடின்றி சவடு மணல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.