மாநிலங்களின் உரிமையை மத்திய அரசு பறிக்க முயல்கிறது
மாநிலங்களின் உரிமையை மத்திய அரசு பறிக்க முயல்கிறது என்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தொல்.திருமாவளவன் கூறினார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று ஈரோடு வந்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:–
தேசிய அளவில் மருத்துவ கல்லூரிகளில் சேர தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (‘நீட்’) நடத்தப்பட்டது. இந்த தேர்வில் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறி சென்னை ஐகோர்ட்டு தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அந்த தடையை நீக்கி தேர்வு முடிவுகளை வெளியிட உத்தரவிட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசு தனது அதிகார பலத்தை மையப்படுத்தி மாநில அரசுகளுக்கான உரிமைகளை படிப்படியாக பறிக்க முயல்கிறது என்பது இந்த முடிவில் இருந்து தெரிகிறது. எனவே ‘நீட்’ தேர்வு முடிவுகளை அறிவிக்கவோ, வெளியிடவோ கூடாது. மாற்றாக, மறு தேர்வு நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.
தமிழர் விரோத போக்குவரி வசூலிப்பை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. இதில் முழுமையாக மாநிலங்களுக்கான வரிவசூலிக்கும் அதிகாரம் பறிக்கப்பட்டு உள்ளது.
ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. குடிநீருக்கே மக்கள் அல்லாடிக்கொண்டு இருக்கும்போது போதிய வறட்சி நிவாரணமும், நிதி ஆதாரமும் வழங்கப்படாத நிலையில், அண்டை மாநிலங்கள் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதையும் மத்திய அரசு தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. மத்திய அரசின் தமிழர் விரோத போக்கினை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
பொதுத்தேர்வுதற்போது 11–ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருப்பதால் மாணவ–மாணவிகள் தொடர்ந்து 3 ஆண்டுகள் பொதுத்தேர்வை எதிர்கொள்ள வேண்டியது உள்ளது. இது நெருக்கடியையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்தும்.
எனவே பள்ளிக்கூட அளவில் கடைசி வகுப்பாக பிளஸ்–2 நிர்ணயம் செய்யப்பட்டு பிளஸ்–2 வில் மட்டும் பொதுத்தேர்வு வைக்க வேண்டும். அல்லது 10–ம் வகுப்பை பள்ளி இறுதி தேர்வாக அளித்து பொதுத்தேர்வு நடத்திவிட்டு 11 மற்றும் 12–ம் வகுப்புகளை ‘பிரி யுனிவர்சிட்டி’ வகுப்புகளாக அறிவித்து செமஸ்டர் (பருவ முறை) தேர்வுகள் கொண்டுவர வேண்டும்.
ஆட்சி கலைப்புஅ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்கெடுப்புக்காக பேரம் பேசப்பட்டது பற்றி தகவல் கூறியதாக கூறப்பட்ட விஷயத்தில் உரையாடலில் ஈடுபட்டு இருப்பவர், அந்த குரல் அவருடையது இல்லை என்று மறுத்து இருக்கிறார். இது குறித்து நீதிவிசாரணை நடத்த முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட வேண்டும். சட்டமன்றத்தில் தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை பேச விடாமல் தடுப்பது ஜனநாயகத்துக்கு புறம்பானதாகும். மாற்றுக்கருத்துகளை அனுமதிப்பதுதான் ஜனநாயகத்துக்கு சிறப்பு.
தற்போதைய தமிழக அரசு நீடிக்க கூடாது. நீடிக்க தகுதி இல்லை என்று பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அரசின் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் தற்போதைய சூழலில் ஆட்சி கலைப்பு என்பது உகந்தது அல்ல. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசை கலைப்பது சரியல்ல. ஆர்.எஸ்.எஸ்.சின் செயல்திட்டங்களையே பா.ஜனதா கட்சி தனது செயல்திட்டமாக ஆட்சி செலுத்தி வருகிறது.
காங்கிரஸ், இடதுசாரிகள், மதச்சார்பற்ற அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து மதவாத, ஜாதியவாத சக்திகளுக்கு எதிராக திரள வேண்டும். இது பாராளுமன்ற தேர்தலுக்கு மட்டுமின்றி, வரப்போகிற ஜனாதிபதி தேர்தலுக்கும் மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
ஈரோட்டில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மற்றும் கலை இலக்கிய நிகழ்ச்சி, பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றார்.