ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் கால்நடை டாக்டர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் கால்நடை டாக்டர்கள் நேற்று விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
பதவி உயர்வு அரசாணையை அமல்படுத்தக்கோரி கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்கமும், கால்நடை உதவி மருத்துவர் சங்கமும் ஒருநாள் விடுப்பு போராட்டம் நேற்று அறிவித்து இருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் கால்நடை டாக்டர்களும், உதவி டாக்டர்களும் நேற்று ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் ஈரோடு சம்பத் நகர் பகுதியில் ஒன்றுகூடி மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலகத்துக்கு சென்று மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்தனர்.
கால்நடை பராமரிப்புத்துறைஅந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தாவது:–
தமிழ்நாட்டில் கால்நடை பராமரிப்புத்துறையில் 2 ஆயிரத்து 764 கால்நடை உதவி டாக்டர்கள் பணி இடங்கள் உள்ளது. இந்த பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் ஆனாலும் பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை. அதற்கு பின்னரும் உதவி இயக்குனர் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கப்படும்போது, தமிழகம் முழுவதும் 311 இடங்கள் மட்டுமே உள்ளதால் பெரும்பாலான உதவி டாக்டர்கள் பதவி உயர்வு இல்லாமலே பணி ஓய்வு பெறும் சூழல் உள்ளது.
இந்த நிலைக்கு மாற்றாக 8 ஆண்டுகளில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்கப்படவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆனால் இதுவரை அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே அந்த உத்தரவை விரைந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தார்கள்.