ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்தில் ரே‌ஷன், ஆதார் கார்டுகளை ஒப்படைக்க 6 கிராம மக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு


ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்தில் ரே‌ஷன், ஆதார் கார்டுகளை ஒப்படைக்க 6 கிராம மக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Jun 2017 4:00 AM IST (Updated: 15 Jun 2017 1:57 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்தில் ரே‌ஷன், ஆதார் கார்டுகளை ஒப்படைக்க 6 கிராம மக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு வெள்ளாற்று அரசு மணல் குவாரிக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது

ஸ்ரீமுஷ்ணம்,

வெள்ளாற்று அரசு மணல் குவாரிக்கு எதிராக 6 கிராமங்களை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று ரே‌ஷன் கார்டு, ஆதார் கார்டை ஒப்படைக்க ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்திற்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வெள்ளாறு

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மதகளிர்மாணிக்கம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தையொட்டி உள்ள வெள்ளாற்றில் அரசு மணல் குவாரி அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்த நிலையில, குவாரி அமைத்தால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும், ஏற்கனவே விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள் தண்ணீரின்றி வறண்டு விட்டது. இந்த நிலையில் மணல் குவாரி அமைத்தால் வரும் காலங்களில் இந்த பகுதியில் விவசாயமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். எனவே இந்த பகுதியில் குவாரி அமைக்க கூடாது என்று மதகளிர் மாணிக்கம் கிராம மக்கள் குவாரிக்கு எதிரான போராட்டத்தை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கினர்.

கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி, கடந்த 12–ந்தேதி மணல் குவாரி, போலீஸ் பாதுகாப்புடன் இயங்க ஆரம்பித்தது. இதை எதிர்த்து போராடிய கிராம மக்களும் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுக்கப்பட்டனர்.

6 கிராம மக்கள் போராட்டம்

இந்த நிலையில் இந்த மணல் குவாரிக்கு எதிரான போராட்டம் தற்போது வலுவடைந்து இருக்கிறது. மதகளிர்மாணிக்கம் கிராம மக்களுடன் அருகில் உள்ள கீரனூர், சக்கரமங்கலம், வல்லியம், எசனூர், கரும்பூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களும் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.

நேற்று இந்த 6 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்தில் தங்களது ரே‌ஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாலுகா அலுவலகம் நோக்கி பேரணி

இதற்காக ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகம் அருகே அங்காளம்மன் கோவில் முன்பு 6 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் பேரணியாக தாலுகா அலுவலகத்தை நோக்கி சென்றனர். அப்போது வெள்ளாறு எங்களது ஆறு, மணல் கொள்ளையர்களே வெளியேறு என்கிற கோ‌ஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

ஊர்வலம் தாலுகா அலுவலகத்தை சென்றடைந்த போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தனசேகர் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து கிராம மக்கள் மணல் குவாரிக்கு எதிராக தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பேச்சுவார்த்தை

பின்னர் போராட்டக்காரர்களில் 10 பேரை மட்டும் தாசில்தாருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக போலீசார் அழைத்து சென்றனர். தாலுகா அலுவலகத்தில் வைத்து, தாசில்தார் உலகளந்தான் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது கிராம மக்கள் மதகளிர்மாணிக்கம் கிராமத்தில் மணல் குவாரி செயல்பட்டால் 15 கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும், விவசாயம் கேள்விக்குறியாகி விடும். எனவே குவாரியை அங்கு செயல்படுத்தக்கூடாது என்று கூறி தாசில்தாருடன் வாக்குவாதம் செய்தனர்.

இதற்கு தாசில்தார் உலகளந்தான் பதில் அளித்து பேசுகையில், ரே‌ஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை வாங்கிக்கொள்ள எங்களுக்கு அதிகாரம் இல்லை. வேண்டுமென்றால் மணல் குவாரி தொடர்பான உங்களது கோரிக்கையை உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். பேச்சுவார்த்தையின் போது, துணை தாசில்தார் அருள்பிரகாசம், வருவாய் ஆய்வாளர் சாந்தி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story