கால்நடை உதவி மருத்துவர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்


கால்நடை உதவி மருத்துவர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்
x
தினத்தந்தி 15 Jun 2017 4:30 AM IST (Updated: 15 Jun 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் அரசு கால்நடை உதவி மருத்துவர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பணி பாதிக்கப்பட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் அரசு கால்நடை மருத்துவமனைகள் மொத்தம் 49 உள்ளன. இவற்றில் 42 கால்நடை உதவி மருத்துவர்கள், 7 மருத்துவ அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள். கால்நடை உதவி மருத்துவர்களுக்கு காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை 49–ஐ அரசு திடீரென ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே மீண்டும் அந்த அரசாரணையை செயல்படுத்த வேண்டும் எனக்கோரியும், இதன்மூலம் கால்நடை உதவி மருத்துவர்களுக்கான காலமுறை பதவி உயர்வு, காலமுறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் குமரி மாவட்டத்தில் நேற்று அரசு கால்நடை உதவி மருத்துவர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினார்கள்.

 மனு

மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி  கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க செயலாளர் பரமேஸ்வரன் தலைமையில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர்.

நேற்று நடந்த போராட்டத்தில் 42 கால்நடை அரசு உதவி மருத்துவர்களும் பங்கேற்றதால் கால்நடைகளுக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கும் பணி பாதிக்கப்பட்டது. இருப்பினும் அந்தந்த கால்நடை மருத்துவமனைகளில் உள்ள கால்நடை பராமரிப்பாளர்கள் மூலம் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.


Next Story