அவசர சிகிச்சை நேரங்களில் ரத்ததானம் செய்து உயிர்களை காக்க வேண்டும்


அவசர சிகிச்சை நேரங்களில் ரத்ததானம் செய்து உயிர்களை காக்க வேண்டும்
x
தினத்தந்தி 15 Jun 2017 4:30 AM IST (Updated: 15 Jun 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

அவசர சிகிச்சை நேரங்களில் ரத்ததானம் செய்து உயிர்களை காக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு, கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வேண்டுகோள் விடுத்தார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் சார்பில் உலக ரத்த கொடையாளர் தினவிழா நேற்று நடந்தது.

இதையொட்டி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணிக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற அவர் கூறியதாவது:–

உயிர்களை காக்க வேண்டும்

குமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் சார்பில் உலக ரத்த கொடையாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ரத்ததானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. அவசர சிகிச்சை நேரங்களில் பொதுமக்கள் ரத்ததானம் செய்து உயிர்களை காக்க வேண்டும்.

குமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ரத்ததானம் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்கள் வழங்கும் ரத்தம் ரத்தவங்கியில் வைக்கப்படுகிறது.  ரத்ததானம் செய்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். எனவே பொதுமக்கள் ரத்ததானம் செய்து ஒரு உயிரை காப்பாற்ற தாமாக முன்வர வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.

பாராட்டு சான்றிதழ்கள்

கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக சென்று எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. பேரணியில் செவிலியர் பயிற்சி கல்லூரிகள், தொழிற்பயிற்சி கல்லூரி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவ–மாணவிகள், ரத்த வங்கி, தொண்டுநிறுவனம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலக பணியாளர்கள் என மொத்தம் 400–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் 54 முறை ரத்ததானம் செய்த கிருஷ்ணதாஸ் என்பவருக்கும், 2016–ம் ஆண்டு தொடர்ந்து மூன்று முறை ரத்ததானம் செய்த அய்யப்பன் மற்றும் சிவகுமார் ஆகிய மூன்று பேர்களுக்கும் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்தினார்.

இதில் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் வசந்தி, ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி டீன்  ரவீந்திரன், ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் திட்ட மேலாளர்  ஸ்டெல்லா ஜெனட், கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி ரத்தவங்கி மருத்துவ அதிகாரி கரோலின்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story