மேட்டூர், பெத்தநாயக்கன்பாளையம், தாரமங்கலத்தில் தி.மு.க.வினர் சாலைமறியல்
தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மேட்டூர், பெத்தநாயக்கன்பாளையம், தாரமங்கலத்தில் தி.மு.க.வினர் சாலைமறியல் செய்தனர்.
மேட்டூர்,
சென்னையில் நேற்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து மேட்டூர் பஸ்நிலையத்தில் நகர தி.மு.க.செயலாளர் காசிவிஸ்வநாதன் தலைமையில் தி.மு.க.வினர் சாலைமறியல் செய்தனர். இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்டதாக 25 பேரை மேட்டூர் போலீசார் கைது செய்தனர்.
கொளத்தூர் பஸ் நிலையத்தில் நகர செயலாளர் தட்சணாமூர்த்தி தலைமையில் தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 9 பேரை கைது செய்தனர்.
பெத்தநாயக்கன்பாளையம்பெத்தநாயக்கன்பாளையம் பஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் பெத்தநாயக்கன்பாளையம் பேரூர் செயலாளர் வெங்கடேசன், வக்கீல் மனோகரன், அவைதலைவர் துரைசாமி, மாவட்ட பிரதிநிதி கருணாநிதி, மகாலிங்கம், மாதேஸ்வரன், பரந்தாமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சாலைமறியல் செய்த தி.மு.க.வினர் 27 பேரை கைது செய்தனர்.
தாரமங்கலம்தாரமங்கலம் பஸ்நிலையம் அருகே தி.மு.க.வினர் சாலைமறியல் செய்தனர். இதற்கு தி.மு.க.தலைமை செயற்குழு உறுப்பினர் அம்மாசி தலைமை தாங்கினார். சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க.பொருளாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய செயலாளர் தங்கராஜ், நகர செயலாளர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டதாக தி.மு.க.வினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.