‘ஜெட் ஏர்வேஸ் விமானம் என்னை ஏற்றாமல் சென்று விட்டது’


‘ஜெட் ஏர்வேஸ் விமானம் என்னை ஏற்றாமல் சென்று விட்டது’
x
தினத்தந்தி 15 Jun 2017 5:25 AM IST (Updated: 15 Jun 2017 5:25 AM IST)
t-max-icont-min-icon

ஜெட் ஏர்வேஸ் விமானம் தன்னை ஏற்றாமல் சென்றுவிட்டதாக கூறி விமான நிலைய ஊழியர்களிடம் ராஜூ ஷெட்டி எம்.பி. வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மும்பை,

ஜெட் ஏர்வேஸ் விமானம் தன்னை ஏற்றாமல் மும்பையில் இருந்து டெல்லி சென்றுவிட்டதாக கூறி விமான நிலைய ஊழியர்களிடம் ராஜூ ஷெட்டி எம்.பி. வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ராஜூ ஷெட்டி எம்.பி.

மராட்டிய பாரதீய ஜனதா தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் சுவாபிமானி ஷேத்காரி சங்கதானா கட்சி தலைவர் ராஜூ ஷெட்டி. ஹத்கனங்கலே தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான இவர், நேற்று காலை மும்பையில் இருந்து டெல்லி செல்வதற்காக விமான நிலையம் வந்தார். பின்னர், ‘போர்டிங் பாஸ்’ பெற்றுக்கொண்டு ஓய்வறையில் காத்திருந்தார்.

இந்த நிலையில், அவர் பயணம் செய்ய இருந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுவிட்டதாக அறிவிப்பு வெளியானது. இதனால், திடுக்கிட்ட ராஜூ ஷெட்டி எம்.பி., இதுபற்றி விமான நிலைய ஊழியர்களிடம் முறையிட்டார். அப்போது, அவர்களுக்கு இடையே சற்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விமான போக்குவரத்து அமைச்சகத்திடம்...

இதுபற்றி ராஜூ ஷெட்டி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:–

நான் அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்தது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு தெரியும். நான் மக்கள் பிரதிநிதி என்ற போதிலும், போர்டிங் கதவுகள் பூட்டப்பட்டது பற்றி யாரும் எனக்கு தெரியப்படுத்தவில்லை.

அடுத்த விமானத்துக்கு டிக்கெட் கேட்டபோதும், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார்கள். தவறு என் மீது இல்லை. ஆனாலும், நான் ரூ.2 ஆயிரம் கூடுதலாக செலுத்தி இருக்கிறேன். இந்த விவகாரத்தை விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் எழுப்ப போகிறேன்.

இவ்வாறு ராஜூ ஷெட்டி எம்.பி. தெரிவித்தார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விளக்கம்

இதனிடையே, ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் விளக்கம் அளித்து வெளியிட்ட அறிக்கையில், ‘‘அவர் குறித்த நேரத்தில் போர்டிங் கேட் வரவில்லை. அதனால் தான் விமானம் சென்றுவிட்டது. பின்னர், வேறொரு விமானத்தில் அவருக்கு டிக்கெட் வழங்கப்பட்டது. சிரமத்துக்காக மன்னிப்பு கோருகிறோம். கவனக்குறைவாக விதிக்கப்பட்ட கட்டணம் திரும்ப வழங்கப்பட்டு விட்டது’’ என்று கூறப்பட்டுள்ளது.


Next Story