திருமணமான 1½ ஆண்டுகளில் மனைவியுடன், ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை


திருமணமான 1½ ஆண்டுகளில் மனைவியுடன், ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 16 Jun 2017 5:30 AM IST (Updated: 15 Jun 2017 11:11 PM IST)
t-max-icont-min-icon

திருமணமான 1½ ஆண்டுகளில் மனைவியுடன், ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவொற்றியூர்,

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அடுத்த தூக்கினாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டி(வயது 29). இவர், சென்னை எழும்பூரில் உள்ள ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக வேலை செய்து வந்தார்.

இவருக்கும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த சசிகலா(23) என்ற பெண்ணுக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அன்று முதலே கணவன்–மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.

இருவரையும் பெற்றோர்கள் சமாதானம் செய்து, கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் எண்ணூரை அடுத்த எர்ணாவூர் பாரதியார் நகர், 1–வது தெருவில் உள்ள சசிகலாவின் உறவினர் வீட்டில் வாடகைக்கு குடி அமர்த்தினர்.

நண்பருக்கு தகவல்

ஆனால் மீண்டும் கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 12–ந்தேதி சசிகலா, அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதனால் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் வீட்டுக்கு திரும்பினர்.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் போலீஸ்காரர் சவுந்தரபாண்டி, வேளச்சேரியில் உள்ள தனது நண்பர் ஒருவருக்கு ‘வாட்ஸ்அப்’பில் குரல் பதிவு மூலம் தகவல் அனுப்பினார்.

அதில் அவர், தான் தன்னுடைய மனைவியுடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தங்கள் சாவுக்கு காரணம் மாமனார், மாமியார் மற்றும் அவர்களின் உறவினர்கள் சிலரது பெயர்களையும் குறிப்பிட்டு இருந்தார்.

தூக்கில் பிணமாக தொங்கினர்

அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த நண்பர், உடனடியாக சவுந்தரபாண்டியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து காலை 11 மணியளவில் எர்ணாவூரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார்.

வீடு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது, சசிகலாவும், சவுந்தரபாண்டியும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த எண்ணூர் போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

கடிதம் சிக்கியது

அங்கு கயிற்றின் ஒரு முனையில் சசிகலாவும், மற்றொரு முனையில் சவுந்தரபாண்டியும் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினர். இதையடுத்து போலீசார், 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வீட்டில் சோதனை செய்த போது, அங்கு சவுந்தரபாண்டி கைப்பட எழுதிய கடிதம் சிக்கியதாகவும், அதில் ‘வாட்ஸ்அப்’பில் அனுப்பிய குரல் பதிவு தகவலையே எழுதி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

முகத்தில் காயம்

ஆனால் சசிகலாவின் முகத்தில் காயம் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். எனவே கணவன்–மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சசிகலா தற்கொலை செய்து கொண்டதால் விரக்தியில் சவுந்தரபாண்டி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது மனைவியை அடித்துக்கொன்று தூக்கில் தொங்க விட்ட பிறகு, போலீசாருக்கு பயந்து சவுந்தரபாண்டி தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணத்தில் எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் சசிகலாவுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி அம்பத்தூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.


Next Story