சொக்கம்புதூரில் 20 நாட்களாகியும் குடிநீர் வினியோகம் இல்லை பொதுமக்கள் சாலை மறியல்
கோவை சொக்கம்புதூரில் 20 நாட்களாகியும் குடிநீர் சப்ளை செய்யப்படாததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை,
சிறுவாணி அணையில் தண்ணீர் இல்லாததால் செல்வபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கோவை 77–வது வார்டுக்குட்பட்ட சொக்கம்புதூர், பழனியப்பாநகர், இ.பி.காலனி உள்ளிட்ட பல பகுதிகளில் 20 நாட்களாகியும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. ஆழ்துளை கிணற்று நீரும் 28 நாட்களாக வழங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குடிநீருக்காக அலைந்து திரியவேண்டிய நிலை ஏற்பட்டது.
மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று காலை 10.30 மணியளவில் காலி குடங்களுடன் சொக்கம்புதூர் மெயின்ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் பிரச்சினை குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘முன்பு 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இப்போது 20 நாளாகியும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டவில்லை. ஆழ்துளை கிணற்று தண்ணீரையாவது வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை மறியல் போராட்டத்தை கைவிட மாட்டோம்’ என்று தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தைபொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன், மாநகராட்சி வார்டு என்ஜினீயர் சரவணன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் இணைப்பு ஏற்படுத்தி தண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். சிறிது நேரத்தில் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.