முதல் கலெக்டர் ஜான் சல்லிவன் நினைவுப்பூங்கா சுற்றுலாதலமாகிறது
ஊட்டி நகரம், ஏரியை உருவாக்கிய முதல் கலெக்டர் ஜான் சல்லிவனுக்கு முதல் மரியாதை செலுத்தும் வகையில் அவரது நினைவு பூங்கா சுற்றுலா தலமாகிறது.
கோத்தகிரி,
ஜான் சல்லிவன் 1788–ம் ஆண்டு ஜூன் 15–ம் தேதி லண்டனில் பிறந்தார். பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி இந்தியாவில் ஆட்சி செய்த காலத்தில், 1815–ம் ஆண்டில் கோயமுத்தூரின் முதல் கலெக்டராக ஜான் சல்லிவன் நியமிக்கப்பட்டார். பின்னர் 1819–ம் ஆண்டில் நீலகிரி மலையை கண்டறிந்தார். அப்போது அவர் வெறும் 1 ரூபாயில் 1822–ம் ஆண்டு ஒரு ஏக்கர் நிலத்தை தோடர் இன மக்களிடமிருந்து விலைக்கு வாங்கி அந்த நிலத்தில் தேயிலை, சின்கோனா, தேக்கு ஆகிய பயிர்களை பெருமளவில் பயிரிட்டார். பின்னர் 1823–ம் ஆண்டு உதகை ஏரியை உருவாக்கி, 5 ஏக்கர் நிலப்பரப்பில் முட்டைகோஸ், பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு ஆகிய இங்கிலீஸ் காய்கறிகளை பயிரிட்டு அறிமுகப்படுத்தி, விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக விளங்கினார்.கல்வீடுமேலும் 1830–முதல் 1832–ம் ஆண்டு வரையிலான காலங்களில் குன்னூரிலிருந்து கோத்தகிரியில் உள்ள திம்பட்டி சாலையை உருவாக்கினார். மேலும் 1828–ம் ஆண்டு 25 வீடுகளை சமவெளி பகுதியில் இருந்து குடியேறியவர்களுக்காக கட்டி கொடுத்தார். 1819–ம் ஆண்டு முதல் 1821–ம் ஆண்டு வரை 2 ஆண்டுகள் கன்னேரிமுக்கு கிராம பகுதியில் உள்ளூர் மக்களின் உதவியுடன் கற்களால் கட்டப்பட்ட அவர் கட்டிய கல் வீடு பெத்தக்கல் பங்களா என அழைக்கப்பட்டு வந்தது. அந்த வீட்டை தனது அலுவலகமாகவும் ஜான் சல்லிவன் பயன்படுத்தி வந்தார். அந்த வீடு சில ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டு அவரது நினைவகமாக மாற்றி ஜான் சல்லிவன் நினைவகம் என்ற பெயரில் தற்போது சுற்றுலா தளமாக செயல்பட்டு வருகிறது.
நினைவு பூங்கா பணிஇந்த நினைவகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், கோத்தகிரி, உதகை உள்ளிட்ட நகரங்களின் அரிய பழைய மற்றும் தற்போதைய புகைப்படங்கள், பழங்குடியினத்தவரின் வாழ்க்கை முறைகள், அவர்களின் தயாரிப்புகள், புத்தகங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் தற்போது 6 ஏக்கர் பரப்பளவில் தற்போதைய மாவட்ட கலெக்டர் சங்கரின் முழு முயற்சியால் ஜான் சல்லிவன் நினைவு பூங்கா அமைக்கும் பணி தொடங்கியது. இந்த நிலையில் தற்போது குன்னூர் எம்.எல்.ஏ சாந்தி ராமு தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களாக பூங்கா அமைக்கும் பணியும், சுற்றுப்புற வேலி அமைக்கும் பணியும், பூ நாற்றுக்கள் மற்றும் 300 மரக்கன்றுகள் நடும் பணியும் கோத்தகிரி பேரூராட்சி சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டராக இருந்தவரும், நவீன உதகை நகரம் மற்றும் உதகை ஏரியை உருவாக்கிய ஜான் சல்லிவன் 1815–ம் ஆண்டு முதல் 1830–ம் ஆண்டு வரை கலெக்டராக இருந்து நீலகிரி மாவட்டத்தின் இயற்கை எழிலை உலகத்திற்கு அடையாளம் காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட ஒருவரான ஜான் சல்லிவன் அவர்களின் நினைவகம் மற்றும் ஜான் சல்லிவன் நினைவு பூங்கா ஆகியவை வரும் காலங்களில் சிறந்த சுற்றுலாத் தலமாக மாறுகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிலைக்கு கலெக்டர் மரியாதைஇந்த நிலையில் ஜான் சல்லிவனின் 299–வது பிறந்த நாள் விழா கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு கிராமத்தில் அமைந்துள்ள அவரது நினைவகத்தில் நடைப்பெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கினார். நீலகிரி மாவட்ட சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் அமர் குஸ்வாஹா, குன்னூர் கோட்டாட்சியர் கீதாபிரியா, மாவட்ட வன அலுவலர் விஜயன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் உமாராணி, உதவி இயக்குனர் சித்ராபானு, தாசில்தார் மணிமேகலை, செயல் அலுவலர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபிரகாஷ், லட்சுமி நரசிம்மபன், பேரூராட்சி துணை இயக்குனர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜான் சல்லிவன் நினைவக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கலெக்டர் சங்கர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:–
சுற்றுலா தலமாக அமையும்
ஆங்கிலேயர்கள் என்றாலே நம்மை அடிமைப்படுத்துபவர்கள் நமது ரத்தத்தை உறிஞ்சுபவர்கள் என்ற கருத்துக்கு மத்தியில் வித்தியாசமான சிந்தனையுடையவர் ஜான் சல்லிவன். உதகை நகரையும், உதகை ஏரியையும் நிர்மானித்து உலகிற்கு நீலகிரியை அடையாளம் காட்டியவரும், இங்கிலீஷ் காய்கறிகளையும், பணப்பயிர்களான தேயிலை, காபி, சின்கோனா உள்ளிட்டவற்றை முதலில் பயிரிட்டு விவசாயத்தை மேம்படுத்தியவர்.
இந்த நிலையில் கன்னேரிமுக்கு சுற்று வட்டார கிராம மக்களின் உதவியுடன் வருகிற ஜனவரி மாதம் 16–ந் தேதிக்குள் ஜான் சல்லிவன் நினைவு தாவரவியல் பூங்கா தோட்டக்கலைத் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் புனரமைக்கப்பட்டு, முக்கிய சுற்றுலாத்தலமாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கன்னேரிமுக்கு ஊர்த்தலைவர் ராமன், ஜான் சல்லிவன் நினைவு கமிட்டி உறுப்பினர்கள் ஆல்வாஸ், கொத்தவாலா, கக்கி சண்முகம் உள்பட ஊர் பொதுமக்கள் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.