தஞ்சையில் 24 பெருமாள்கள் கருட சேவை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


தஞ்சையில் 24 பெருமாள்கள் கருட சேவை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 15 Jun 2017 10:45 PM GMT (Updated: 2017-06-16T02:56:14+05:30)

தஞ்சையில் 24 பெருமாள்கள் கருட சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 கோவில்களுள் தஞ்சை மாமணிக்கோவில்கள் மிக சிறப்பு வாய்ந்தவை. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்ய தேசங்களுள் 3-வது விளங்கும் மேலசிங்கபெருமாள், நீலமேகப்பெருமாள், மணிக்குன்ன பெருமாள் கோவில்களில் கருடசேவை நேற்று நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக வெண்ணாற்றங்கரை நரசிம்மபெருமாள் சன்ன தியில் திவ்யதேச பெருமாள் களுக்கு திருமங்கைஆழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 24 கருடசேவை நேற்று நடைபெற்றது. அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 18 கோவில்கள் மற்றும் ஏனைய 6 கோவில்கள் என மொத்தம் 24 கோவில் களில் இருந்து கருட வாகனத்தில் பெருமாள்கள் எழுந்தருளி அவரவர் கோவில்களில் இருந்து புறப்பட்டு கொடிமரத்து மூலையை வந்தடைந்தனர். அங்கிருந்து அன்னபட்சி வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் எம்பெருமானை தொழுத வண்ணம் முதலில் வர அவரை தொடர்ந்து நீலமேகப்பெருமாள் லட்சுமியுடன் மற்ற பெருமாள்களான நரசிம்மபெருமாள், வெண்ணாற்றங்கரை மணிக்குன்னபெருமாள், வேளூர் வரதராஜபெருமாள், கல்யாணவெங்கடேச பெருமாள் உள்ளிட்ட 24 பெருமாள்களும் கருட வாகனத்தில் புறப்பட்டனர்.

பக்தர்கள் சாமி தரிசனம்

கருடவாகனத்தில் எழுந் தருளிய அனைத்து பெருமாள்களும் வரிசையாக கீழராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி வழியாக உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்துவிட்டு மீண்டும் கொடிமரத்து மூலையை வந்தடைந்தனர். 4 வீதிகளிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். 24 பெருமாள்களையும் பக்தர்கள் ஒரு சேர கண்டு தரிசித்து பரவசமடைந்தனர். பின்னர் பெருமாள்கள் அங்கிருந்து புறப்பட்டு அந்தந்த கோவில்களை சென்றடைந் தனர். கருடவாகனத்திற்கு முன்பும், பின்பும் பக்தர்கள் பஜனைபாடியபடி சென்றனர். கருடசேவை விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் பரணிதரன், ராமானுஜதர்சன சபையினர் செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) நவநீத சேவை நடைபெறுகிறது. இதனை வெண்ணெய்தாழி மகோற்சவம் என்றும் அழைப்பர். இன்று காலை 6 மணிக்கு பெருமாள்கள் நவநீத சேவையில் புறப்பட்டு காலை 8 மணிக்கு கொடிமரத்து மூலையை வந்து அடைகிறார்கள். பின்னர் அங்கிருந்து கீழராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி ஆகிய வீதிகள் வழியாக அனைவருக்கும் காட்சி அளித்து வந்த வழியே அவரவர் கோவில்களுக்கு சென்றடைவர். நாளை (சனிக்கிழமை) விடையாற்றி விழா நடைபெறுகிறது.


Related Tags :
Next Story