டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதாக புகார்


டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதாக புகார்
x
தினத்தந்தி 16 Jun 2017 4:15 AM IST (Updated: 16 Jun 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதாக குடிமகன்கள் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் தற்போது 80 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் ஒரு கடை சென்னிமலை ரோடு அரசு ஐ.டி.ஐ. எதிரில் உள்ளது. இந்த கடையில் மது குறிப்பிட்ட விலையை கூட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக நேற்று குடிமகன்கள் புகார் செய்தனர்.

ஒரு சிலர் இதுதொடர்பாக டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடுதல் விலை


இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த மதுப்பிரியர் மணிகண்டன் என்பவர் கூறியதாவது:–

ஈரோட்டில் திடீரென்று டாஸ்மாக் கடைகள் பலவற்றை அடைத்து விட்டனர். இதனால் ஒரு சில இடங்களில் மட்டுமே கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு கூட்டம் அதிகமாக வருவதால் மது மற்றும் பீர் வகைகளை கூடுதல் விலையில் விற்பனை செய்கிறார்கள். சராசரியாக ரூ.10 வரை விலை உயர்வாக விற்பதால் குடிமகன்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோல் பலரும் புகார்கள் தெரிவித்ததுடன் விற்பனையாளர்களிடமும் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் தகராறு செய்தவர்களிடம் மதுபாட்டிலில் குறிப்பிட்டு இருந்த விலை மட்டுமே பெற்றனர். இதனால் குடிமகன்கள் பிரச்சினையை கைவிட்டு புறப்பட்டு சென்றனர்.

மேலும் சிலர் கூறும்போது, ‘ஈரோடு நகர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் மது வகைகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதுபற்றி அதிகாரிகளுக்கு தெரிந்தாலும் அவர்கள் கண்டுகொள்வதில்லை’ என்றார்கள்.

நடவடிக்கை எடுக்கப்படும்


இதுபற்றி ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் எம்.லியாகத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது வகைகள் விற்பனை செய்ய வேண்டிய விலைப்பட்டியல் வழங்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலுக்கு அதிகமாக விற்பனை செய்யக்கூடாது என்று மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுவரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை. சென்னிமலை ரோடு கடை தொடர்பாக முதன் முதலாக புகார் வந்து உள்ளது. அந்த கடையில் உடனடியாக சோதனை நடத்தப்படும். மேலும் தற்போது செயல்பட்டு வரும் அனைத்து கடைகளிலும் எதிர்பாராத வகையில் திடீர் சோதனை நடத்தப்படும். அப்போது கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெண்கள் புகார்


டாஸ்மாக் கடைகளில் இருந்து மது வாங்கும் குடிமகன்கள் திறந்த வெளிகள், பொதுமக்கள் கூடும் பகுதிகளில் நின்றுகொண்டு மது குடிப்பதாக பொதுமக்கள் புகார்கள் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் கூறியதாவது:–

சென்னிமலை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க வெளியூர்களில் இருந்தும் பலர் வருகிறார்கள். அவர்கள் மதுவாங்கிவிட்டு இங்கேயே திறந்த வெளியில் நின்று கொண்டு மதுகுடிக்கிறார்கள். காலை முதல் இரவு வரை இது தொடர்கிறது. இதனால் பள்ளி–கல்லூரி மாணவிகள், வேலைகளுக்கு சென்று வரும் பெண்கள் என்று அனைவரும் இந்த பகுதியை கடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் திறந்த வெளியில், பொதுமக்கள் அதிகம் சென்று வரும் கடைகளின் அருகில் மதுக்குடிக்க அனுமதிப்பதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Related Tags :
Next Story