திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை சீரமைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்கள் தர்ணா


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை சீரமைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்கள் தர்ணா
x
தினத்தந்தி 16 Jun 2017 3:21 AM IST (Updated: 16 Jun 2017 3:21 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை சீரமைக்கக்கோரி பள்ளி சீருடையுடன் கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளை மேம்படுத்தக்கோரி இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் பள்ளி சீருடையுடன் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தியிடம் மனு கொடுக்க நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தங்கள் கைகளில் கொடிகளை ஏந்திக்கொண்டு கலெக்டர் அலுவலக வளாக வாசலில் இருந்து ஊர்வலமாக கோ‌ஷங்களை எழுப்பியபடி வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த அவர்கள் திடீரென கோ‌ஷங்களை எழுப்பிய படியே ஊர்வலமாக கலெக்டர் அலுவலக 5–வது தளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை சந்திப்பதற்காக சென்றனர். ஆனால் அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் உள்ளே செல்வதற்கு அனுமதி மறுத்து அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே சிறிதுநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர் அவர்கள் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தியை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை

அரசு பள்ளிகளில் பிளஸ்–1 வகுப்பு சேர்க்கையை ஒற்றை கலந்தாய்வு முறையில் நடத்த வேண்டும். ஆர்.டி.இ.2009–ஐ முழுமையாக அமல்படுத்தி அதில் உள்ள முறைகேட்டை நிவர்த்தி செய்ய வேண்டும். அரசு பள்ளிகளில் நடைபெறும் சுயநிதி பாடப்பிரிவுகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்கவும், காலியாக உள்ள ஆசிரிய பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிகள் பயன்படுத்தும் நாப்கின் எரியூட்டும் எந்திரம் எந்த பள்ளியிலும் இல்லாமல் சுகாதாரமற்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் எரியூட்டும் எந்திரத்தை வழங்க வேண்டும். செட்டிப்பாளையம், வாவிபாளையம் உயர்நிலை பள்ளிகளை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். பூலுவப்பட்டி உயர்நிலை பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை உடனடியாக மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடவேண்டும். பள்ளி நூலகங்களை மேம்படுத்தி மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும். இந்த கோரிக்கைகள் மீது உடனடியாக மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சம்பந்தப்பட்ட பள்ளிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து இந்திய மாணவ சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story