முத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
முத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முத்தூர்,
முத்தூர் அருகே முருகம்பாளையம் உள்ளது. வெள்ளகோவில் ஒன்றியம் மேட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊர் பொதுமக்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யாததால் கடும் வறட்சியின் காரணமாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் முருகம்பாளையம் பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் திண்டாடி வருகின்றனர். மேலும் நீண்ட தூரம் சென்று ஆழ்குழாய் கிணறுகளில் குடிநீரை கொண்டு வந்தும், குடிநீரை விலைக்கு வாங்கியும் பயன்படுத்தி வரும் பரிதாப சூழ்நிலை நிலவி வருகிறது.
சாலை மறியல்இந்த நிலையில் முருகம்பாளையம் பொதுமக்களுக்கு கடந்த 4 மாதங்களாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை 10 மணிக்கு ஒன்று திரண்டு வந்து முத்தூர்–காங்கேயம் மெயின் ரோட்டில் ராசாத்தாவலசு பஸ் நிறுத்தத்தில் காலிக்குடங்களுடன் நடுரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த வெள்ளகோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் குருவம்மாள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட் தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்புஇந்த பேச்சுவார்த்தையின் முடிவில் முருகம்பாளையம் பகுதியில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து சீரான குடிநீர் வினியோகம் செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தினால் முத்தூர்–காங்கேயம் மெயின் ரோட்டில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.