எடப்பாடி அருகே தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் தர்ணா போராட்டம்


எடப்பாடி அருகே தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2017 3:45 AM IST (Updated: 16 Jun 2017 3:45 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி அருகே தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.

எடப்பாடி,

எடப்பாடி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட சின்னதாண்டானூர் பகுதியில் 50–க்கும் மேற்பட்ட தேசிய ஊரகவேலை உறுதித்திட்ட பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் அரசு மானியத்தில் வீடுகளில் தனிநபர் கழிப்பிடம் கட்டும் பணியில் குறிப்பிட்ட நாட்கள் வேலை செய்யவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த ஊராட்சியில் தனிநபர் கழிப்பிடம் கட்டும் பணியில் ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர்.

ஆனால் அவர்கள் செய்த பணியின் விவரம் கணினியில் ஏற்றப்படாமல் மீண்டும் தனிநபர் கழிப்பிடம் கட்டிட பணி ஒதுக்கப்பட்டது. மேலும் அவர்கள் பணிக்கு செல்லவில்லை என கூறி அவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளமும் பிடித்தம் செய்யப்பட்டது. இதைகண்டித்தும் மீண்டும் வேலை வழங்கக்கோரியும் 50–க்கும் மேற்பட்ட தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் செட்டிமாங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் கிடைத்ததும், ஊராட்சி செயலாளர் கோபால் அங்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வேலை வழங்குவதாக உறுதி கூறினார். அதன்பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி சிறிதுநேரம் பரபரப்பாக காணப்பட்டது.



Next Story