தொடர் குற்றச்செயலில் ஈடுபட்ட பிரபல வழிப்பறி திருடன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தொடர் குற்றச்செயலில் ஈடுபட்ட பிரபல வழிப்பறி திருடன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சேலம்,
சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் சேகர். இவர், கடந்த மாதம் 4–ந் தேதி வேலுநகர் பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பிரபல வழிப்பறி திருடனான தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்ற ரஞ்சித்குமார்(வயது24) வந்தார்.
அவர், திடீரென கத்தியை காட்டி மிரட்டி சேகரிடம் இருந்த பணத்தை பறித்தார். சேகர் சத்தம்போடவே, அருகில் இருந்தவர்கள் அங்கு வந்தனர். அவர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்து விட்டு, அங்கிருந்து ரஞ்சித் தப்பி சென்றார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்தனர். பின்னர் சேலம் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
பெண்ணிடம் கைவரிசைரஞ்சித் மீது கடந்த 2015–ம் ஆண்டு அம்மாபேட்டை போலீஸ் நிலைய எல்லையில், கடையில் இருந்த பெண்ணிடம் 9 பவுன் நகை, 6 செல்போன்கள் பறித்து சென்ற வழக்கும், மேலும் சீலநாயக்கன்பட்டியில் குமார் என்பவரிடம் மதுகுடிக்க பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கடந்த மாதம் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
எனவே, தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட வழிப்பறி திருடன் ரஞ்சித் மீது, ஓராண்டு ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன், போலீஸ் துணை கமிஷனர் ராமகிருஷ்ணனுக்கு பரிந்துரை செய்தார்.
குண்டர் சட்டம் பாய்ந்ததுஅவர், அதை மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமாருக்கு சிபாரிசு செய்தார். அதை ஏற்று, வழிப்பறி திருடன் ரஞ்சித்தை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க கமிஷனர் உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு ஆணை, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஞ்சித்துக்கு சார்வு செய்யப்பட்டது.