மல்லசமுத்திரத்தில் சிறு விசைத்தறியாளர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு
ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மல்லசமுத்திரம் பகுதியில் சிறு விசைத்தறியாளர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மல்லசமுத்திரம்,
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் சிறு விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறு விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தில் சங்கத்தின் தலைவர் தைலா.கே.சுப்பிரமணியம் தலைமையில் விசைத்தறி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எம்.எஸ்.வி.சேகர், பொருளாளர் சண்முகம், அன்பழகன் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் மல்லசமுத்திரம், வெங்கடேசபுரி, கோட்டைமேடு, காளிப்பட்டி உள்பட பேரூராட்சிக்கு உட்பட்ட சிறு விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் ஏராளமானோரும், விசைத்தறி தொழிலாளர்களும் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இதில் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
வேலை நிறுத்தம்இதன்படி நேற்று காலை முதல் மாலை வரை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் ஆயிரத்திற்கும் அதிகமான விசைத்தறிகள் இயக்கப்படவில்லை.
இதுகுறித்து விசைத்தறி சங்க நிர்வாகிகள் கூறும்போது, மத்திய அரசு 18 சதவீதம் வரி விதிப்பு செய்து 3 மாதத்திற்கு ஒருமுறை கணக்கு காட்ட வேண்டும் என நிர்ப்பந்தம் படுத்துகிறது. ரூ.20 லட்சத்திற்கு மேல் வங்கி மூலம் வரவு, செலவு செய்யப்படுபவர்களுக்கு வரி விதிப்பு செய்வதைப்பற்றி எங்களுக்கு பாதிப்பு இல்லை. ஆனால் சிறு விசைத்தறி உற்பத்தியாளர்கள் மீது ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு செய்வது கண்டனத்திற்கு உரியது. சிறு விசைத்தறி உற்பத்தியாளர்களின் குறைகளை தீர்க்காவிடில் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். அரசின் கவனத்தை திருப்பவே இந்த அடையாள வேலை நிறுத்தம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.