டாக்டர் சிகிச்சை அளிக்காததால் இறந்த கன்றுக்குட்டியுடன் விவசாயி தர்ணா போராட்டம்


டாக்டர் சிகிச்சை அளிக்காததால் இறந்த கன்றுக்குட்டியுடன் விவசாயி தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2017 4:55 AM IST (Updated: 16 Jun 2017 4:55 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர்கள் சிகிச்சை அளிக்காததால் இறந்த கன்றுக்குட்டியுடன் விவசாயி தர்ணா போராட்டம் நடத்தியதால் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்,

விருத்தாசலம் அருகே குருவன்குப்பத்தை சேர்ந்தவர் அதிரதன். இவருடைய மகன் பிரபாகரன் (வயது 27).விவசாயி. இவருக்கு சொந்தமான பசுமாடு கடந்த 13–ந்தேதி ஒரு கன்றுக்குட்டியை ஈன்றது. ஆனால் அந்த கன்றுக்குட்டிக்கு ஆசனவாய் இல்லை. நேற்று முன்தினம் அந்த கன்றுக்குட்டிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக பிரபாகரன் விருத்தாசலம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் டாக்டர்கள் இல்லாததால், மருத்துவ உதவியாளர் கடலூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்.

தர்ணா போராட்டம்

இதையடுத்து நேற்று பிரபாகரன், தன்னுடைய உறவினர் ராசப்பன் மகன் பிரபாகரன் உதவியுடன் கன்றுக்குட்டியை மோட்டார் சைக்கிளில் வைத்து கடலூருக்கு மதியம் 12 மணி அளவில் கொண்டு வந்தார். ஆனால் அங்கும் கால்நடை டாக்டர் இல்லை. இதையடுத்து, டாக்டருக்காக மாலை 3 மணி வரை காத்திருந்த நேரத்தில் கன்றுக்குட்டி இறந்து விட்டது.

இதனால் மனவேதனை அடைந்த பிரபாகரன் அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தார். தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளிக்காததால் தன்னுடைய கன்றுக்குட்டி இறந்து விட்டதாக புகார் தெரிவித்தார். அதன்பிறகு இறந்த கன்றுக்குட்டியுடன் கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து பிரபாகரன் தர்ணா போராட்டம் நடத்தினார். அவருக்கு ஆதரவாக அவருடன் வந்த மற்றொரு பிரபாகரனும் உடனிருந்தார்.

பரபரப்பு

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் பயிற்சி சப்–இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ், தாசில்தார் பாலமுருகன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மோகன் ஆகியோர் போராட் டத்தில் ஈடுபட்ட பிரபாகரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தன்னுடைய கன்றுக்குட் டிக்கு சிகிச்சை அளிக்காத டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.

இதை கேட்ட அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இருப்பினும் பிரபாகரன் இது பற்றி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்து விட்டு இறந்த கன்றுக்குட்டியை மோட்டார் சைக்கிளில் ஊருக்கு கொண்டு சென்றார்.

நடவடிக்கை

இது பற்றி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மோகனிடம் கேட்ட போது, இது பற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். டாக்டர்கள் தவறு செய்திருந்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

--–

படம் உண்டு..


Next Story