4 ஆயிரம் பேர் வசிக்கும் பகுதியில் வங்கிகள் இல்லாத நிலை


4 ஆயிரம் பேர் வசிக்கும் பகுதியில் வங்கிகள் இல்லாத நிலை
x
தினத்தந்தி 16 Jun 2017 12:11 AM GMT (Updated: 2017-06-16T05:40:50+05:30)

செய்யாறு அருகே 4 ஆயிரம் பேர் வசிக்கும் பகுதியில் ஆக்கூர் கிராமத்தில் வங்கி எதுவும் இல்லாததால், கிராமத்தில் வங்கி தொடங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு கிராம மக்கள் மனு கொடுக்க வந்தனர்.

திருவண்ணாமலை

செய்யாறு அருகே 4 ஆயிரம் பேர் வசிக்கும் பகுதியில் ஆக்கூர் கிராமத்தில் வங்கி எதுவும் இல்லாததால், கிராமத்தில் வங்கி தொடங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு கிராம மக்கள் மனு கொடுக்க வந்தனர். வங்கி இல்லாததால் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 15 கிராம பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளதாக அவர்கள் கூறினர்.

கோரிக்கை மனு

செய்யாறு தாலுகா அனக்காவூர் ஒன்றியம் ஆக்கூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் 50–க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர் வேம்பன் தலைமையில் கலெக்டரிடம் மனு அளிக்க சென்றனர். ஆனால் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஆய்வு பணிக்காக ஆரணிக்கு சென்றதால், அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருந்ததாவது:–

ஆக்கூர் கிராமத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், தபால் நிலையம், மின்வாரிய அலுவலகம், கால்நடை மருத்துவமனை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், போன்றவைகள் உள்ளன.

ஆக்கூரை சுற்றி குண்ணவாக்கம், மகாஜனம்பாக்கம், கூழமந்தல், கூழமந்தல் பெண்டை, உக்கல், உக்கல்பெண்டை, வெள்ளாமலை, கீழ்நீர்குன்றம், இளநீர்குன்றம், அத்தி, மடிப்பாக்கம், கீழ்நேத்தப்பாக்கம், பாண்டியம்பாக்கம் உள்பட 15 கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள்.

வங்கி மூடல்

ஆக்கூர் கிராமத்தின் அருகேயுள்ள சிப்காட் தொழிற்சாலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவை அனைத்துக்கும் மையப்பகுதியாக ஆக்கூர் உள்ளது. இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டது.

வங்கியில் ஆக்கூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 15 கிராம மக்கள் சேமிப்பு வங்கி கணக்கு தொடங்கி பல்வேறு பணபரிவத்தனைகள் செய்து வந்தனர். ஆனால் அந்த வங்கி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது.

தொலைவில் வங்கிகள்

அதனால் ஆக்கூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் தொழிலாளர்கள், மாணவர்கள், முதியோர் உதவித்தொகை பெறுவோர், அரசு ஊழியர்கள் என அனைவரும் செய்யாறு, காஞ்சீபுரம், மாமண்டூர், வெம்பாக்கம், வந்தவாசி ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு சென்று பணம் எடுத்து வருகின்றனர்.

அனைத்து வங்கிகளும் 10 அல்லது 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன. அதனால் வங்கிகளுக்கு சென்று பணம் செலுத்தவும், பணம் எடுக்கவும் கிராம மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வங்கிகள் தொலைவில் இருப்பதால் பணம் செலுத்தவும், பணம் எடுப்பதற்கும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். மேலும் கூலி தொழிலாளிகள், 100 நாள் திட்டத்தில் வேலை செய்பவர்கள் அன்றைக்கு வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

எனவே ஆக்கூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 15 கிராம மக்களின் வசதிக்காக ஆக்கூரில் தேசிய அல்லது கூட்டுறவு வங்கி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.Next Story