பாளையங்கோட்டையில் நகர பஞ்சாயத்து பணியாளர்கள் உண்ணாவிரதம்


பாளையங்கோட்டையில் நகர பஞ்சாயத்து பணியாளர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 16 Jun 2017 8:45 PM GMT (Updated: 16 Jun 2017 12:11 PM GMT)

பாளையங்கோட்டையில் நகர பஞ்சாயத்து பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

பாளையங்கோட்டையில் நகர பஞ்சாயத்து பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

20 அம்ச கோரிக்கைகள்

தமிழ்நாடு பேரூராட்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

தகுதிவாய்ந்த கிராம பஞ்சாயத்துகளை நகர பஞ்சாயத்துகளாக தரம் உயர்த்த வேண்டும். அடிப்படை பணியாளர் முதல் உதவி இயக்குனர் வரையிலான அனைத்து நிலைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் பூர்த்தி செய்ய வேண்டும். அனைத்து நகர பஞ்சாயத்துகளிலும் கணினி இயக்குபவர் பணியிடம் தோற்றுவித்து தற்போது பணிபுரிந்து வரும் கணினி இயக்குபவர்களை சேர்த்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணியாளர் இடமாறுதல்களை கலந்தாய்வு முறையில் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

உண்ணாவிரதம்

இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு கூட்டமைப்பின் நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரேசன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் லெனின், பொறியாளர் சங்க மாநில தலைவர் ஜனார்த்தன பிரபு, பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ஜஸ்டின் திரவியம், ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எட்வர்டு ஜெயசீலன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் செல்வராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதில் செயல் அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் கந்தசாமி, துப்புரவு ஆய்வாளர் சங்க மாநில தலைவர் ராஜகணபதி, ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அல்லா பிச்சை, அமைச்சுப்பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ராஜநம்பி கிருஷ்ணன், தொழில்நுட்ப பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சம்சுதீன், அரசு பணியாளர் சங்க மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி உள்பட நகர பஞ்சாயத்து பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் குமாரவேல் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

Next Story