தனியார் பஸ்–வேன் மோதல்: 17 பெண் தொழிலாளர்கள் படுகாயம் விளாத்திகுளம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு


தனியார் பஸ்–வேன் மோதல்: 17 பெண் தொழிலாளர்கள் படுகாயம் விளாத்திகுளம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 16 Jun 2017 8:30 PM GMT (Updated: 2017-06-16T18:53:18+05:30)

விளாத்திகுளம் அருகே தனியார் பஸ்சும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்கு உள்ளானதில் 17 பெண் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

விளாத்திகுளம்,

விளாத்திகுளம் அருகே தனியார் பஸ்சும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்கு உள்ளானதில் 17 பெண் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இதனால், தூத்துக்குடி–விளாத்திகுளம் சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெண் தொழிலாளர்கள்

விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், தூத்துக்குடி அரசரடியில் உள்ள தனியார் பூச்செண்டு தொழிற்சாலையில் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்கள் தினமும் வேனில் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.

நேற்று காலையில் அரியநாயகிபுரத்தில் இருந்து பெண் தொழிலாளர்கள் வேனில் வேலைக்கு புறப்பட்டனர். அந்த வேனை தூத்துக்குடி மேல அரசரடியைச் சேர்ந்த விஷ்ணமூர்த்தி மகன் பாலமுருகன் (வயது 25) ஓட்டிச் சென்றார்.

வேன்–பஸ் மோதல்

விளாத்திகுளம் அருகே துளசிபட்டி வளைவில் திரும்பியபோது, எதிரே தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளம் நோக்கி வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக வேனின் மீது மோதியது. இந்த விபத்தில் வேனில் இருந்த அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த ஆயிஷா பீவி (30), அரியலட்சுமி (33), சண்முகலட்சுமி (46), செண்பகவல்லி (35), ஜெயராணி (43), பார்வதி (28), சுப்புலட்சுமி (37), பூபதி (47), முத்துலட்சுமி (35), முத்துமாரி (28), ஆவுடைத்தாய் (40), பஞ்சவர்ணம் (40), விளாத்திகுளத்தைச் சேர்ந்த முருகலட்சுமி (33), முத்துலட்சுமி (35), கற்பகம் (32), குமாரசக்கனாபுரத்தைச் சேர்ந்த ராமலட்சுமி (35), செந்திலா (40) ஆகிய 17 பெண்கள் காயம் அடைந்தனர்.

போலீசார் விசாரணை

வேன் டிரைவர் பாலமுருகன் தப்பி ஓடி விட்டார். அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த விபத்தால், தூத்துக்குடி–விளாத்திகுளம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story