ஓட்டப்பிடாரம் அருகே பாதிரியார் வீடு முற்றுகை பள்ளி மாணவரை தாக்கிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


ஓட்டப்பிடாரம் அருகே பாதிரியார் வீடு முற்றுகை பள்ளி மாணவரை தாக்கிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Jun 2017 8:00 PM GMT (Updated: 16 Jun 2017 2:00 PM GMT)

ஓட்டப்பிடாரம் அருகே பள்ளி மாணவரை தாக்கிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை பாதிரியார் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே பள்ளி மாணவரை தாக்கிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை பாதிரியார் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பள்ளி மாணவர்


நெல்லை மறைமாவட்டத்திற்கு உட்பட்ட ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வடக்கு வண்டானம் பங்கின் கீழ், தெற்கு தீத்தான்பட்டியில் ஆர்.சி. தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், அதே பகுதியை சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவரின் மகன் அந்தோணி முத்து (10) 5–வது படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் பள்ளியில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த அந்தோணி முத்துவை பள்ளி ஆசிரியை ஜெயசீலி கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அந்தோணி முத்துவின் கையில் வீக்கம் ஏற்பட்டது.

பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற அந்தோணி முத்துவை, அவருடைய பெற்றோர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் பசுவந்தனை போலீஸ் நிலையத்தில் ஆசிரியை ஜெயசீலி மீது புகார் செய்தனர்.

பாதிரியார் வீடு முற்றுகை

அதனை தொடர்ந்து அந்தோணி ராஜ் தலைமையில் அந்த பகுதிமக்கள் அனைவரும் சேர்ந்து பள்ளி ஆசிரியையை பணிமாற்றம் செய்ய கோரி, வடக்கு வண்டானத்தில் உள்ள பள்ளி நிர்வாகியுமான பாதிரியார் நேசமணி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம், நெல்லை மறைமாவட்ட கல்வி குழு கண்காணிப்பாளர் யாகப்பராஜ், கோவில்பட்டி வட்டார அதிபர் அலாசியஸ் துரைராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்தது.

நள்ளிரவிலும் நீடித்த...

பின்னர் நள்ளிரவு 2 மணிக்கு நெல்லை மறைமாவட்ட முதன்மை குரு சேவியர் டெரன்த், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அந்த ஆசிரியை மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story