பவழக்குன்று மலையில் நித்தியானந்தா சீடர்கள் ஆக்கிரமித்து கட்டியிருந்த ஆசிரமம் அதிரடியாக அகற்றம்
திருவண்ணாமலை, பவழக்குன்று மலையில் நித்தியானந்தா சீடர்கள் ஆக்கிரமித்து கட்டியிருந்த ஆசிரமம் அதிரடியாக அகற்றம் அதிகாரிகளுடன் வாக்குவாதம்–தள்ளுமுள்ளு
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை பவழக்குன்று மலையில் நித்தியானந்தா சீடர்கள் ஆக்கிரமித்து கட்டியிருந்த ஆசிரமம் அதிரடியாக அகற்றப்பட்டது. சிலைகளை அதிகாரிகள் அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீடர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மலையை ஆக்கிரமித்த சீடர்கள்திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகே பழமை வாய்ந்த பவழக்குன்று மலை உள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் பல ஆண்டுகளாக குடியிருப்புகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பாக நித்தியானந்தாவின் சீடர்கள் மலையில் பல ஏக்கர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
அங்கு தென்னங்கீற்றுகளால் பெரிய அளவில் குடிசை ஏற்படுத்தி ஆசிரமம் அமைத்தனர். அதில் 3 சிலைகளை வைத்து பூஜை செய்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். அந்த பகுதிக்கு சென்ற பொதுமக்களை அவர்கள் விரட்டினர். இதனால் குடியிருப்புவாசிகள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.
பொதுமக்கள் எதிர்ப்புஇந்த நிலையில் நித்தியானந்தா சீடர்கள் முதற்கட்டமாக மலையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள பல ஏக்கர் இடத்தை சுற்றி முள்வேலி அமைக்கவும், அதன்பின்னர் ஆக்கிரமிப்பு இடத்தில் கான்கிரீட் கொண்டு ஆசிரமம் உள்பட பல்வேறு கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை செய்யவும் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப முள்வேலி அமைப்பதற்கான கம்பிகள், கற்கள் மலைக்கு கொண்டு வரப்பட்டன.
இதைக்கண்ட அந்த பகுதி பொதுமக்கள் மலையில் முள்வேலி அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள ஆசிரமத்தை நேற்று முன்தினம் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அதனை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். அதற்கு நித்தியானந்தா சீடர்கள் மறுப்பு தெரிவித்ததால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அகற்ற உத்தரவுஇதையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் முறையிட்டு, புகார் மனு அளித்தனர். அப்போது பவழக்குன்று மலையை நேரில் பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக அவர்களிடம் உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி கூறினார்.
அதன்படி நேற்று காலை 10 மணியளவில் உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, தாசில்தார் ரவி ஆகியோர் பவழக்குன்று மலைக்கு நேரடியாக சென்றனர். அவர்களுடன் வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், கிராம நிர்வாக அலுவலர் சீனுவாசன் மற்றும் திருவண்ணாமலை டவுன் போலீசாரும் சென்றனர். அவர்கள் நித்தியானந்தாவின் சீடர்கள் அமைத்திருந்த ஆசிரமத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது மலையை ஆக்கிரமித்து ஆசிரமம் கட்டி பூஜை நடத்தி வருவது தெரிய வந்தது. இதையடுத்து ஆசிரமத்தை அகற்ற உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டார். அதன்பேரில் வருவாய் துறையினர் மற்றும் போலீசார் ஆசிரமத்தை அகற்றும் நடவடிக்கையை தொடங்கினர். ஆசிரமத்துக்குள் இருந்தவர்களை வெளியேறும்படி அவர்கள் கூறினர்.
இதையடுத்து வருவாய் துறையினர் ஒவ்வொரு பகுதியாக கூரையை அகற்றினர். தொடர்ந்து ஆசிரமத்தின் உள்ளே இருந்த சிலைகளை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அதற்கு சீடர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை வெளியேறும்படி கூறினர்.
அதற்கு பெண் சீடர்கள் மறுத்தனர். சிலையை அப்புறப்படுத்த முயன்ற நபர்கள் மற்றும் அதிகாரிகளை அவர்கள் அவதூறாக திட்டி சாபம் விட்டார்கள். அவர்களை போலீசார் மற்றும் வருவாய் அதிகாரிகள் எச்சரித்தனர்.
குண்டுக்கட்டாக....ஆண் சீடர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி மலையில் இருந்து வெளியேற்றினர். பின்னர் சிலைகளையும் மலையில் இருந்து கீழே இறக்கினர். தொடர்ந்து பெண் சீடர்களை ஆசிரமத்தில் இருந்து வெளியேறும்படி அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் அவர்கள் வெகுநேரமாக சிலைகள் இருந்த இடத்தின் அருகே அமர்ந்திருந்தனர். இதையடுத்து பெண் போலீசார் அவர்களை மலையை விட்டு கீழே இறக்க முயன்றனர்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் சீடர்கள் உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். அதையடுத்து போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து நித்தியானந்தாவின் சீடர்கள் வெளியேற்றப்பட்டதோடு அவர்கள் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.
போலீஸ் பாதுகாப்புஇதே இடத்தை மீண்டும் நித்தியானந்தா சீடர்கள் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
பவழக்குன்று மலையில் நித்தியானந்தா சீடர்கள் ஆக்கிரமித்து கட்டியிருந்த ஆசிரமம் மற்றும் சிலைகளை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்ததால் 2 மணி நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.