கொட்டாரத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் திடீர் சாலை மறியல்


கொட்டாரத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Jun 2017 3:45 AM IST (Updated: 17 Jun 2017 12:51 AM IST)
t-max-icont-min-icon

கொட்டாரத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இந்த பகுதி மக்களுக்கு கிணறுகளில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது வறட்சி காரணமாக கிணறுகள் தூர்ந்து போனதால் குடிநீர் வினியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது.
முன்பு 2 நாட்கள், 5 நாட்கள் இடைவெளிவிட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது 10 நாட்களாகியும் பல இடங்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

சாலை மறியல்

இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே குடிநீர் வினியோகத்தை சீராக செய்யக்கோரி நேற்று காலை கொட்டாரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆண்களும், பெண்களும் என 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் குடிநீர் வினியோகத்தை முறைபடுத்தகோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். பெண்கள் காலிகுடங்களை ஏந்தியபடி கன்னியாகுமரி- நாகர்கோவல் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு வேணுகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் கன்னியாகுமரி-நாகர்கோவில் சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story