தொண்டியில் பல மாதங்களாக செயல்படாத ஏ.டி.எம். எந்திரம்
தொண்டியில் பல மாதங்களாக செயல்படாத ஏ.டி.எம். எந்திரம் பொதுமக்கள் கடும் அவதி
தொண்டி
தொண்டியில் பல மாதங்களாக செயல்படாத ஏ.டி.எம். எந்திரத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
ஏ.டி.எம். மையம்ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் நகரமாகும். இப்பகுதியில் கடல்சார் வணிகம் மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறது. இதேபோல் இப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர். இதனால் இங்கு பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதி மக்கள் இங்குள்ள அரசுடைமை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் தங்களது சேமிப்பு கணக்கு தொடங்கி பராமரித்து வருகின்றனர். இந்த வங்கி சார்பில் தொண்டியில் ஏ.டி.எம். மையம் அமைத்துள்ளது.
அந்த மையத்தில் பணம் எடுக்கவும் சேமிப்பு கணக்கில் பணம் போடவும் முடியும். ஆனால் கடந்த பல மாதங்களாக ஏ.டி.எம். எந்திரம் பழுதடைந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தினமும் இந்த மையம் திறந்து வைக்கப்படுகிறது. இதனால் இங்கு பணம் எடுக்க அல்லது சேமிப்பு கணக்கில் பணம் போட வரும் பொதுமக்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
கோரிக்கைஇதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் கேட்டால் சரியான பதில் அளிப்பதில்லை என்று பொதுமக்களும், வாடிக்கையாளர்களும் குற்றம் சுமத்துகின்றனர். மேலும் இந்த ஏ.டி.எம். எந்திரம் பழுதடைந்து இருப்பதால் இப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுவதுடன் வீண் அலைக்கழிப்புக்கும் ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக ஏ.டி.எம். மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.