வளையல் அணிந்து வந்த விவசாயிகளுக்கு அனுமதி மறுப்பு வளையலை உடைத்து போராட்டம்


வளையல் அணிந்து வந்த விவசாயிகளுக்கு அனுமதி மறுப்பு வளையலை உடைத்து போராட்டம்
x
தினத்தந்தி 17 Jun 2017 4:15 AM IST (Updated: 17 Jun 2017 1:24 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க வளையல் அணிந்து வந்த விவசாயிகளுக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் வளையலை உடைத்து போராட்டம் நடத்தியபோது 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள் சில நேரங்களில் மாவட்ட நிர்வாகம், தமிழகஅரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பட்டைநாமம் போட்டும், புலி பொம்மையுடன் வந்தும், மண்சட்டி, மண் கலயம், மண்டைஓடு போன்றவற்றை கொண்டு வந்தும் நூதன முறையில் கோரிக்கைமனு அளிப்பார்கள். கூட்டத்திற்கு வரும் விவசாயிகள் மனுவை தவிர வேறு எதுவும் கொண்டு வராதபடி தடுப்பதற்காக குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் நாளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர் சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் சிலர் கையில் கண்ணாடி வளையல் அணிந்து கொண்டு குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வளையல்களுடன் செல்ல அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் வளையல்களை உடைத்து போராட்டம் செய்தனர். அப்போது 2 பேருக்கு வளையல் துண்டு கிழித்ததில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கூறும்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். கடந்த 6 ஆண்டுகளாக குறுவை சாகுபடி செய்யவில்லை. எங்கள் கோரிக்கையை யாரிடம் தெரிவிப்பது என்றே தெரியவில்லை. தமிழகத்தில் ஆளும் கட்சியினர் பணம், தங்கத்திற்காக போராடுகிறார்கள். நாங்கள் சோறுக்காக அழுது கொண்டு இருக்கிறோம் என்றனர்.

மாறி, மாறி கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு

இதையடுத்து கையில் வளையல் இல்லாமல் கூட்டத்திற்கு சென்று விவசாயிகள் நேராக கலெக்டரிடம் சென்று மனு அளித்துவிட்டு கோரிக்கைகள் குறித்து பேசி கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் அமர்ந்து இருந்த விவசாயிகள் சிலர் எழுந்து சென்று, செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். கலெக்டரிடம் பேசி கொண்டிருந்த விவசாயிகள் பதிலுக்கு விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரியும், விவசாய கடனை தள்ளுபடி செய்ய கோரியும் மாறி, மாறி இரு தரப்பு விவசாயிகளும் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் கூட்ட அறைக்குள் விரைந்து வந்தனர். இதையடுத்து அனைவரும் இருக்கையில் அமரும்படி கலெக்டர் கூறியதால் ஒரு தரப்பினர் இருக்கையில் அமர்ந்தனர். மற்றொரு தரப்பினர் கூட்டத்தில் இருந்து வெளியே சென்று விட்டனர்.

Next Story