மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு, ஆதரவு: இருதரப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது
திருமருகல் அருகே மணல் குவாரி அமைப்பதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து இருதரப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருமருகல்,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி கிராமத்தில் ஒருவர் மணல் எடுக்க கடந்த 2013–ம் ஆண்டு முதல் 2019–ம் ஆண்டு வரை நாகை மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று இருந்தார். அதன்படி அங்கு மணல் குவாரி அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அங்கு மணல் குவாரி அமைக்க அனுமதி வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அதிகார அமைப்பின் தலைவர் ராஜ்குமார் தலைமையில் குவாரி முன் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்கு குவாரி அமைக்க ஆதரவு தெரிவித்து ஏர்வாடி கிராமத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு இருதரப்பினரிடையே கோஷ்டி மோதல் ஏற்படும் நிலை உருவானது.
21 பேர் கைதுஇதுகுறித்து தகவல் அறிந்ததும் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், திட்டச்சேரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அம்சவல்லி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பினர். இருப்பினும் மக்கள் அதிகார அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் 11 பெண்கள் உள்பட 21 பேரை திட்டச்சேரி போலீசார் கைது செய்தனர்.