மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உரிய அதிகாரம் வழங்க வேண்டும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம்


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உரிய அதிகாரம் வழங்க வேண்டும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம்
x
தினத்தந்தி 17 Jun 2017 4:15 AM IST (Updated: 17 Jun 2017 2:35 AM IST)
t-max-icont-min-icon

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உரிய அதிகாரங்களை வழங்கும் விதமாக சட்ட திருத்தம் செய்யவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தனிநபர் தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார். அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உரிய அதிகாரங்களை வழங்கும் விதமாக சட்ட திருத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த தீர்மானத்தின் மீது நடந்த விவாதம் வருமாறு:–

அன்பழகன்: 1963–ம் ஆண்டு ஒன்றியத்து ஆட்சி பரப்புகள் சட்டத்தின்படி பல்வேறு அதிகாரங்கள் கவர்னருக்கு வழங்கப்பட்டுள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் கவர்னர் இணைந்து செயல்படாத நிலையில் அரசின் திட்டங்களும், அறிவிப்புகளும் செயல்படுத்தப்பட முடியாத நிலையால் புதுச்சேரி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இச்சட்டத்தை மறு ஆய்வு செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உரிய அதிகாரங்கள் வழங்கும் விதமாக சட்ட திருத்தம் செய்யவேண்டும்.

டெபாசிட் இழந்தவர்

அனந்தராமன் (காங்): டெல்லி சட்டமன்ற தேர்தலில் டெபாசிட் இழந்த ஒருவர், மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் கவர்னராக இருக்கிறார். அவர் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய அனுமதி மறுக்கிறார். முதல்–அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் அதிகாரம் இல்லை என்கிறார். அவர் ஹிட்லரை விட மோசமாக செயல்படுகிறார்.

வையாபுரி மணிகண்டன் (அ.தி.மு.க.): அரசின் திட்டங்களை கவர்னர் தடுக்கிறார். அவருக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

எம்.என்.ஆர்.பாலன் (காங்): தூங்குபவனை எழுப்பலாம். ஆனால் தூங்குவதுபோல் நடிப்பவனை எழுப்ப முடியாது என்பார்கள். அதேபோல் கவர்னர் தூங்குவதுபோல் நடிக்கிறார்.

ஜெயமூர்த்தி (காங்): ஆட்சி மாறிவிட்டது. ஆனால் ஒரு அதிகாரியைக்கூட நம்மால் மாற்ற முடியவில்லை. இதனால் எந்த வேலையும் நடக்கவில்லை.

தீப்பாய்ந்தான் (காங்): ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக கவர்னரின் செயல்பாடு உள்ளது.

அரசு செய்த குற்றம்

அன்பழகன்: கடந்த 2009–ம் ஆண்டு தனியார் கல்லூரிகளில் மருத்துவ முதுகலை படிப்பில் 50 சதவீத இடத்தை அரசுக்கு வழங்கவேண்டும் என்று அகில இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு வெளியிட்டது. கடந்த கால என்.ஆர்.காங்கிரஸ் அரசு அதில் ஒரு இடத்தைகூட பெற்றது கிடையாது. எனவே இதைப்பற்றி பேச என்.ஆர்.காங்கிரசாருக்கு உரிமையில்லை.

இந்த முறை கலந்தாய்விற்கு முன்னதாக கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்காததுதான் இந்த அரசு செய்த குற்றம்.

ஆனால் கவர்னர் கிரண்பெடி இந்த அரசு மீது கெட்டபெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறார். முதலில் வருங்கால வைப்புநிதியில் மோசடி என்றார். பல ஆயிரம் அரசு ஊழியர்களை இந்த வி‌ஷயத்தில் அவர் அரசுக்கு எதிராக திருப்பினார்.

அமைச்சர் ஷாஜகான்: கவர்னரை விட அமைச்சரவைக்குத்தான் அதிக அதிகாரம் உள்ளது. 13 வகையான கோப்புகளைத்தான் நாம் கவர்னருக்கு அனுப்பவேண்டும். எல்லாவிதமான கோப்புகளையும் அவருக்கு அனுப்பவேண்டிய அவசியமில்லை.

சமூக வலைதளங்களில் பதிவு

முதல்–அமைச்சர் நாராயணசாமி: நாங்கள் கவர்னருடன் இணைந்து செயல்படவே விரும்பினோம். இந்த அவையில் அபாண்டமான குற்றச்சாட்டுகளை அசோக் ஆனந்து கூறியுள்ளார். அதாவது மாணவர் சேர்க்கை விவகாரத்தில் புதுவை அரசு சென்னை ஐகோர்ட்டில் எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை என்று கூறினார். புதுவை அரசு சார்பில் தனியார் கல்லூரிகள் வசூலிக்கும் கட்டணங்களையே நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் வசூலிக்கவேண்டும் என்று வலியுறுத்தினோம்.

தற்போது ஐகோர்ட்டு மாணவர்களிடம் ரூ.10 லட்சம் கட்டணம் வசூலிக்க கூறியுள்ளது. கவர்னர் ரூ.5.50 லட்சம் கல்விக்கட்டணத்தில் சேர்ப்பதாக கூறினார். அவரால் அப்படி வாங்கிக்கொடுக்க முடிந்ததா? தீர்ப்பு வரும் 3 நாட்களுக்கு முன்பே காலையில் தீர்ப்பு, மாலையில் தீர்ப்பு என்று சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார். அவர் ஒரு வழக்கில் பசுமை தீர்ப்பாய நீதிபதிக்கே கடிதம் எழுதி புதுவை அரசுக்கு தண்டனை கொடுக்க சொன்னார். அவர் எப்படி செயல்படுகிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

விட்டுக் கொடுக்கமாட்டோம்

புதுவையில் ஜனாதிபதி ஆட்சி இருந்தால் அவரது ஏஜெண்டுகளுக்கு (கவர்னர்) அதிகாரம் உண்டு. ஆனால் சட்டமன்றம் அமைந்துவிட்டால் அந்த அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வந்துவிடும். ஜனாதிபதிக்கே அதிகாரம் இல்லாதபோது அவரது ஏஜெண்டுகளுக்கு என்ன அதிகாரம்? அமைச்சரவையின் ஆலோசனையை கேட்டுதான் கவர்னர் செயல்படவேண்டும்.

கவர்னருக்கு என தனிப்பட்ட அதிகாரம் ஏதும் கிடையாது. 5 வருடத்துக்குப்பின் நாம்தான் மக்களை சந்திக்க போகிறோம். டெல்லியில் இருந்து வருபவர்கள் செல்வது கிடையாது. பதவியேற்பின்போது ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக்கொள்பவர்கள் அரசு கோப்புகளை சமூகவலைதளங்களில் பதிவிடுகின்றனர். யார் புகார் கொடுத்தாலும் அதை நேரடியாக விசாரிக்க அவருக்கு அதிகாரம் கிடையாது.

ஏகமனதாக நிறைவேற்றம்

எதுவாக இருந்தாலும் அமைச்சரவையின் ஒப்புதல் பெற்றுதான் அவர்கள் செய்யவேண்டும். அமைச்சரவையின் முடிவுகளை ஏற்கவேண்டும். கவர்னர் அதிகார எல்லையை மீறியதால் நான் நேரடியாக சந்தித்து பேசி விளக்கம் கூறினேன். அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அவர் ஏதேச்சதிகாரமாக செயல்பட முடிவு செய்துவிட்டார். அவரை மாற்ற முடியும் என்ற எண்ணத்தில் நாங்கள் இருந்தோம். ஆனால் எங்களுக்கான அதிகாரத்தை நாங்கள் விட்டுகொடுக்கமாட்டோம். எனவே இந்த தீர்மானத்தை அரசின் தீர்மானமாக எடுத்துக் கொண்டு நிறைவேற்றலாம்.

இதைத்தொடர்ந்து அதை குரல் வாக்கெடுப்புக்கு விட்ட சபாநாயகர் வைத்திலிங்கம் அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.


Next Story