சுத்தமான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


சுத்தமான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 17 Jun 2017 4:16 AM IST (Updated: 17 Jun 2017 4:16 AM IST)
t-max-icont-min-icon

சுத்தமான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குளித்தலை,

குளித்தலை ஒன்றியம் இரண்யமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட வலையப்பட்டி அண்ணாநகர் வடக்கு காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று வலையப்பட்டி- பனிக்கம்பட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மறியலில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
வலையப்பட்டி அண்ணா நகர் வடக்கு காலனி பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் வழங்கப்படும் குடிநீரை நாங்கள் ஆய்வு செய்தபோது அதில் நச்சுத்தன்மை அதிகம் இருப்பது தெரியவந்தது.

ஆய்வு

இந்த குடிநீரை குடிப்பதால் எங்கள் பகுதியில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 30-க்கும் மேற்பட்டவர்கள் வைரஸ், டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல்கள் மற்றும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பலர் திருச்சி, குளித்தலை பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் எங்கள் பகுதியை சேர்ந்த சந்தன குமார் என்பவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் இறந்துவிட்டார்.

எனவே எங்கள் பகுதியில் வினியோகம் செய்யப்படும் தண்ணீரை அதிகாரிகள் ஆய்வு செய்து எங்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் காவிரி குடிநீர் இணைப்பு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரத்தினம் மற்றும் குளித்தலை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 3 நாட்களில் பொதுமக்களின் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையடுத்து அப்பகுதிக்கு நடமாடும் மருத்துவக்குழு வரவழைக்கப்பட்டு பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் வலையப்பட்டி- பனிக்கம்பட்டி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story