விவசாய கடனை தள்ளுபடி செய்ய முடியாவிட்டால் சித்தராமையா அரசு ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும்


விவசாய கடனை தள்ளுபடி செய்ய முடியாவிட்டால் சித்தராமையா அரசு ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும்
x
தினத்தந்தி 16 Jun 2017 11:31 PM GMT (Updated: 16 Jun 2017 11:30 PM GMT)

கர்நாடக சட்டசபையில் நடைபெற்ற மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் குமாரசாமி பேசியதாவது:–

பெங்களூரு,

விவசாய கடனை தள்ளுபடி செய்ய முடியாவிட்டால் சித்தராமையா அரசு ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று சட்டசபையில் குமாரசாமி வலியுறுத்தினார்.

கர்நாடக சட்டசபையில் நடைபெற்ற மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் குமாரசாமி பேசியதாவது:–

72 மணி நேரம் உண்ணாவிரதம்

கர்நாடகத்தில் கடும் வறட்சியில் சிக்கி தவிக்கும் விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை சித்தராமையா அரசு நிறைவேற்றவில்லை. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இது கவலை அளிப்பதாக உள்ளது. விவசாயத்துறையின் வளர்ச்சி நன்றாக இருந்தும், மத்திய பிரதேசம், மராட்டிய மாநிலங்களில் விவசாயிகள் கடுமையான போராட்டத்தை நடத்தினார்கள்.

நமது கர்நாடக அரசுக்கு அதிர்ஷ்டம் உள்ளது. ஏனென்றால், விவசாயிகளும், பொதுமக்களும் இன்னும் பொறுமையாக இருந்து அமைதியை காக்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் அங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் விவசாய கடனை தள்ளுபடி செய்யக் கோரி 72 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஆனால் அதே காங்கிரஸ் அரசு உள்ள கர்நாடகத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது.

தற்காலிக நிவாரணம் கிடைக்கும்

விவசாய கடனை தள்ளுபடி செய்யக் கோரி போராட்டம் நடத்துவதாக எடியூரப்பா கூறுகிறார். ஆனால் மத்திய அரசிடம் இருந்து எந்த உதவியையும் பெற்றுத்தர அவர் முயற்சி செய்யவில்லை. விவசாய கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. ஆனாலும் மத்திய பிரதேசம், மராட்டிய மாநிலங்களில் கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதனால் மத்திய அரசை எதிர்பார்க்காமல் கர்நாடக அரசும் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். கடன் தள்ளுபடியால் விவசாயிகளின் பிரச்சினை தீர்ந்துவிடாது. ஆனால் அவர்களுக்கு தற்காலிக நிவாரணம் கிடைக்கும். ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆட்சிக்கு வராது என்பதால், விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி அறிவித்துள்ளார் என்று அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு உள்ளது. இதை நான் ஒரு சவாலாக எடுத்துள்ளேன்.

ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும்

எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் வானிலைக்கு ஏற்ப பயிர்களை சாகுபடி செய்ய நடவடிக்கை எடுப்பேன். விவசாயிகளின் நலனுக்காக சில திட்டங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளேன். விவசாய கடன் எப்போது தள்ளுபடி செய்யப்படும் என்பதை அரசு சொல்ல வேண்டும். அப்போதாவது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை கைவிடுவார்கள். கடனை தள்ளுபடி செய்ய முடியாவிட்டால், ஆட்சியை விட்டு சித்தராமையா அரசு வெளியேற வேண்டும்.

இந்த ஆண்டும் மழை பற்றாக்குறையாக தான் பெய்யும் என்று சில நிபுணர்கள் கூறி இருக்கிறார்கள். அதனால் இதை சமாளிக்க முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.


Next Story