சிறுபான்மையின மாணவ–மாணவிகள் கல்வி கடன்பெற விண்ணப்பிக்கலாம்


சிறுபான்மையின மாணவ–மாணவிகள் கல்வி கடன்பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 24 Jun 2017 10:15 PM GMT (Updated: 2017-06-24T18:49:51+05:30)

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவ– மாணவிகள் கல்வி கடன்பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவ– மாணவிகள் கல்வி கடன்பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி மற்றும் குறுகிய கால உயர்திறன் வளர்ச்சி படிப்பு படிக்கும் சிறுபான்மை வகுப்பை சேர்ந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மாணவ– மாணவிகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கல்வி கடன் வழங்கும் திட்டம் ‘டாம்கோ’ மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த கல்விக்கடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் சேர்க்கை கட்டணம், பயிற்றுவிப்பு கட்டணம், புத்தகம், எழுதுபொருள் மற்றும் படிப்புக்கு தேவையான உபகரணங்கள், தேர்வு கட்டணம், விடுதி மற்றும் உணவு கட்டணம் ஆகியவற்றுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கல்விக்கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமான அடிப்படையில் 2 திட்டங்களாக செயல்படுத்தப்படுகின்றன.

முதல் திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமானம் நகர்ப்புறமாக இருந்தால் ரூ.1 லட்சத்து 3 ஆயிரமும், கிராமப்புறமாக இருந்தால் ரூ.81 ஆயிரமாகவும் இருக்க வேண்டும். இளங்கலை தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி மற்றும் வேலைவாய்ப்பு படிப்புகளுக்கு வருடத்திற்கு ரூ.3 லட்சம் வீதம் 5 ஆண்டுகளுக்கு அதிகபட்சம் 15 லட்சமும், முதுகலை படிப்புகளுக்கு ரூ.3 லட்சம் வீதம் 3 ஆண்டுகளுக்கு ரூ.9 லட்சமும், வெளிநாடுகளில் படிப்பவர்களுக்கு வருடத்திற்கு ரூ.4 லட்சம் வீதம் 5 வருடங்களுக்கு ரூ.20 லட்சமும் வழங்கப்படுகிறது.

இரண்டாவது திட்டத்தில் தொழிற்கல்வி, தொழில்நுட்ப படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு படிப்புகளுக்கு வருடத்திற்கு ரூ.4 லட்சம் வீதம் அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரையிலும், முதுகலை படிப்புகளுக்கு வருடத்திற்கு ரூ.3 லட்சம் வீதம் ரூ.9 லட்சம் வரையிலும், வெளிநாடுகளில் படிப்பவர்களுக்கு வருடத்திற்கு ரூ.6 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.

கல்வி கடன்பெற்ற மாணவ– மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் கல்விகடனை புதுப்பிக்க, ஆண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை சம்பந்தப்பட்ட வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினத்தை சார்ந்த மாணவ– மாணவிகள் தங்களது கல்வியினை தடையின்றி பயில்வதற்கு மேற்குறிப்பிட்ட கல்விக்கடன் திட்டங்களுக்கான விண்ணப்ப படிவங்களை வேலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், நகர கூட்டுறவு வங்கிகள், அதன் கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெற்று விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.Next Story