விக்கிரவாண்டி- கும்பகோணம்- தஞ்சாவூர் இடையே இருவழிச்சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்


விக்கிரவாண்டி- கும்பகோணம்- தஞ்சாவூர் இடையே இருவழிச்சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்
x
தினத்தந்தி 24 Jun 2017 10:45 PM GMT (Updated: 24 Jun 2017 7:19 PM GMT)

விக்கிரவாண்டி- கும்பகோணம்- தஞ்சாவூர் இடையே இருவழிச்சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று பெரம்பலூரில் இல.கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் இந்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் திருச்சி மண்டலம் சார்பில் பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையிலான பாரதீய ஜனதா அரசின் 3-ஆண்டு சாதனைகள் விளக்க கண்காட்சி மற்றும் அனைவரும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி என்ற தலைப்பில் மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டம் எளம்பலூர் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்திலும், தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தூய்மை பணிசெய்யும் நிகழ்ச்சி புதிய பஸ்நிலைய பகுதியிலும் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஸ்ரீராமகிருஷ்ணா மற்றும் ஸ்ரீசாரதா கல்விக்குழுமத்தின் தலைவர் சிவசுப்ரமணியன் தலைமை தாங்கினார். பா.ஜ.க. நிர்வாகிகள் சந்திர சேகர், சாமி.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சமையல் கியாஸ் மானியம்

அதைத்தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், பாராளுமன்ற மேலவை எம்.பி.யுமான இல.கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூய்மை பணி, மத்திய அரசின் சாதனை விளக்க கண்காட்சி மற்றும் விளக்க கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமரின் உஜ்ஜாலா திட்டத்தின்கீழ் 20 ஏழை-எளிய பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்புக்கான ஆணை, சமையல் கியாஸ் மானியத்தை கைவிட்ட 5 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை இல.கணேசன் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

பணிகள் விரைவில் தொடங்கும்

தமிழகத்தில் கல்வித்துறை மட்டும் மிக சிறப்பாக செயல்படுகிறது. தமிழக அரசின் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செயல்பாட்டில் நீட் தேர்வில் அடுத்த ஆண்டு அதிகப்படியான மாணவர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. தமிழகத்தில் உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும், காலம் கடத்தாமல் உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும். விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பாக அந்தந்த மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என மத்திய நிதித்துறை அமைச்சரே தெரிவித்துவிட்டார். இதில், தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சரகம் தெரிவித்த தகுதியான இடங்களில் பரிந்துரைத்தால் மட்டுமே தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வாய்ப்பு உள்ளது. விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் இடையே இருவழி தேசிய நெடுஞ்சாலை அமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற் கான பணிகள் விரைவில் தொடங்கும்.

இவ்வாறு இல.கணேசன் தெரிவித்தார்.


Related Tags :
Next Story
  • chat