மாவட்டத்தில் காலியாக உள்ள சமையலர், உதவியாளர் பணியிடங்களுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்


மாவட்டத்தில் காலியாக உள்ள சமையலர், உதவியாளர் பணியிடங்களுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 24 Jun 2017 10:30 PM GMT (Updated: 2017-06-25T02:50:16+05:30)

சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள சமையலர் மற்றும் சமையலர் உதவியாளர் பணியிடங்களுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள 39 சமையலர் மற்றும் 458 சமையலர் உதவியாளர் பணியிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் தகுதியுடைய பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி விளம்பர பலகையில் வெளியிடப்பட்டுள்ளன.

சமையலர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினர் மற்றும் ஆதிதிராவிடர் 8–ம் வகுப்புத் தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் 1.7.2017 அன்று பொதுப்பிரிவினர் மற்றும் ஆதிதிராவிடர் 21 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாமலும்,பழங்குடியினர் 18 வயது பூர்த்தியடைந்து 40 வயதுக்கு மிகாமலும்,விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது முதல் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். நியமன பணியிடத்திற்கும் விண்ணப்பதாரர், குடியிருப்பிற்கும் இடையே உள்ள தூரம் 3 கி.மீ. சுற்றளவுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

இதேபோல் மாவட்டத்தில் காலியாக உள்ள 458 சமையலர் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினர் மற்றும் ஆதிதிராவிடர் 5–ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்கள் 1.7.2017 அன்று பொதுப்பிரிவினர் மற்றும் ஆதிதிராவிடர்களாக இருந்தால் 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பழங்குடியினர் 18 முதல் 40 வயதுக்குள்ளும், விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 முதல் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.

சமையலர் மற்றும் சமையலர் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் விண்ணப்பத்தினை தொடர்புடைய ஊராட்சி ஒன்றியம், நகராட்சி அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 10–ந்தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் அல்லது தபால் மூலம் காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story