மராட்டிய அரசு அறிவிப்பு 89 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் ரூ.34 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தள்ளுபடி


மராட்டிய அரசு அறிவிப்பு 89 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் ரூ.34 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தள்ளுபடி
x
தினத்தந்தி 24 Jun 2017 11:00 PM GMT (Updated: 2017-06-25T02:54:42+05:30)

மராட்டியத்தில் 89 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.34 ஆயிரம் கோடிக்கு பயிர்க்கடன் தள்ளுபடியை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார்.

மும்பை,

மராட்டியத்தில் 89 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.34 ஆயிரம் கோடிக்கு பயிர்க்கடன் தள்ளுபடியை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார்.

மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், வரி செலுத்துவோர், அரசு பணியாளர்கள் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மராட்டியத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் கடந்த 1-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு ஆளும் பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

போராட்டம் வாபஸ்

போராட்டத்தின் போது பாலை சாலையில் கொட்டியும், காய்கறிகளை சாலையில் வீசியும் அரசுக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தினர். அத்துடன் நகர்ப்புறங்களுக்கு காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை மறித்து தீ வைத்து எரித்தனர்.

இந்த போராட்டத்தை தொடர்ந்து, சிறு குறு விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, ரூ.30 ஆயிரம் கோடி வரையில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படலாம் என்று தகவல் வெளியானது. இதனை ஏற்று விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

தள்ளுபடி ஆனது

இந்த நிலையில், மும்பையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் நேற்று மந்திரி சபை கூட்டம் நடந்தது. இதில் பயிர்க்கடன் தள்ளுபடி பற்றி தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது. முடிவில், ரூ.34 ஆயிரத்து 20 கோடிக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்வது என்று மந்திரி சபை முடிவு செய்தது.

இதனை நிருபர்களிடம் தெரிவித்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இதுபற்றி மேலும் கூறியதாவது:-

89 லட்சம் விவசாயிகள்

கடந்த 2012-ம் ஆண்டு முதல் இடைவிடாத வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகள், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், முந்தைய பயிர்க்கடனை செலுத்தும் வரையில், அவர்களால் புதிய கடன் பெற இயலவில்லை. விரக்தியில் இருக்கும் விவசாயிகளுக்கு உதவிசெய்வோம் என்று நாங்கள் உறுதியளித்தோம்.

கடந்த 2-3 நாட்களாக அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய அமைப்பினர் உள்ளிட்ட பலருடன் நாங்கள் ஆலோசனை நடத்தி, நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய முடிவு எடுத்தோம். அதன்படி ஒவ்வொரு விவசாயிக்கும் தலா ரூ.1½ லட்சம் வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் 89 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர். 40 லட்சம் விவசாயிகள் கடன்சுமையில் இருந்து முழுமையாக விடுவிக்கப்படுவர்.

ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை

மேலும், இந்த ஜூன் மாதம் வரை முறையாக கடன் தவணை செலுத்திய விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இருப்பினும், விவசாயம் சார்ந்த மந்திரிகள், முன்னாள் மந்திரிகள், வியாபாரிகள், குரூப்-1 அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள் மற்றும் வாட் வரி, வருமான வரி செலுத்துவோருக்கு பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் பொருந்தாது.

கடந்த காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, பயிர்க்கடன் தள்ளுபடி செய்தபோது வங்கிகள் ஊழலில் ஈடுபட்டன. எனவே, நாங்கள் இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வங்கிகளில் ஊழல் நடைபெறாத நிலையை உறுதிப்படுத்துவோம். வங்கிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். அப்போது தான் கடன் தொகை பயனாளிகளை முறையாக சென்றடையும்.

ஒருமாத சம்பளம்

பயிர்க்கடன் தள்ளுபடி சுமை மாநில அரசின் நிதி நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். அதனால், நாங்கள் எங்களது செலவை குறைக்கிறோம். பயிர்க்கடன் தள்ளுபடிக்கு உதவுவதற்காக பாரதீய ஜனதாவை சேர்ந்த அனைத்து மந்திரிகளும், எம்.எல்.ஏ.க்களும் தங்களது ஒருமாத சம்பளத்தை வழங்குவார்கள்.

இந்த மாபெரும் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்துக்கு சத்ரபதி சிவாஜியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

அரசின் பயிர்க்கடன் தள்ளுபடிக்கு சிவசேனா உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

காங்கிரஸ் கண்டனம்

அதே வேளையில், மாநில அரசின் இந்த முடிவு மிகவும் காலதாமதமாக எடுக்கப்பட்டதாகவும், கடந்த 3 ஆண்டுகளாக முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய கோரும் விவசாயிகளுக்கு இது போதுமானது அல்ல என்றும் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், “இது முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி அல்ல. இதன் மூலம் அனைத்து விவசாயிகளும் பயன்பெற மாட்டார்கள்” என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீலும், காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சவானும் குறிப்பிட்டனர்.

ஏற்கனவே, விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக தங்களது எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத சம்பளத்தை வழங்குவதாக சிவசேனா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story