விவசாயமும்.. வித்தியாசமும்..


விவசாயமும்.. வித்தியாசமும்..
x
தினத்தந்தி 25 Jun 2017 9:57 AM GMT (Updated: 2017-06-25T15:27:36+05:30)

சரஸ்வதி கவுலா, ஓட்டல் நிர்வாகக்கல்வி படித்துவிட்டு, ஓட்டல் துறையில் வேலை பார்த்தவர். வங்கியிலும் பணி புரிந்திருக்கிறார்.

ரஸ்வதி கவுலா, ஓட்டல் நிர்வாகக்கல்வி படித்துவிட்டு, ஓட்டல் துறையில் வேலை பார்த்தவர். வங்கியிலும் பணி புரிந்திருக்கிறார். இரு பணிகளையும் மன நிறைவுடன் தொடர முடியாமல் வெளியேறியவர் ஆவணப்பட இயக்குநராக களம் இறங்னார். கிராமப்புற வாழ்க்கை, சுற்றுச் சூழல் சார்ந்த குறும் படங்களை உருவாக்கினார். அப்போது ஏராளமான விவசாயிகளை சந்தித்தார். அதனால் விவசாயத்தின் மீது துளிர்விட்ட ஆர்வம் விவசாயியாக அவரை உருமாற்றி இருக்கிறது. இவர் ஆந்திராவை சேர்ந்தவர்.

“ஓட்டல் துறையில் வேலை பார்த்தபோது என்னால் சுயமாக சிந்தித்து செயல்பட முடியவில்லை. இரண்டு முறை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினேன். வேலை செய்ய விரும்பாத உணர்வுடன் தினமும் காலையில் எழுந்து பணிக்கு செல்ல மனம் ஒப்பவில்லை. சுதந்திரமாக செயல்பட விரும்பி அந்த வேலையை விட்டு வெளியேறி, வங்கியில் பணிபுரிந்தேன். அந்த வேலை யிலும் திருப்தி ஏற்படவில்லை” என்கிறார்.

பின்பு சரஸ்வதிக்கு திரைப்பட துறை மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற துடிப்புடன் இங்கிலாந்து சென்று திரைத்துறை சார்ந்த படிப்பை படித்திருக்கிறார். பின்னர் ஆந்திரா திரும்பியவர் உதவி இயக்குனராக சில படங் களில் பணியாற்றி இருக்கிறார். வணிகரீதியான திரைப்படங்கள் எடுப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லாமல் இருந்திருக்கிறது. அதனால் சமூக பிரச்சினைகளை மையப்படுத்தும் குறும்படங்களை இயக்க தொடங்கி இருக்கிறார்.

‘விஷன் 2020’ என்ற பெயரில் இவர் இயக்கிய குறும் படம் நகர்புற வாழ்வியலோடு பின்தங்கிய கிராமப்புற வளர்ச்சியையும், வறட்சி நிலவரத்தையும் சீர்தூக்கி பார்ப்பதாக அமைந்திருந்தது. மற்றொரு ஆவணப்படம், பசுமைப் புரட்சி என்ற பெயரில் கலப்பின விதைகள் மற்றும் ரசாயன உரங்களின் பங்களிப்பு பற்றிய இருண்ட பக்கத்தை படம்பிடித்து காட்டுவதாக அமைந்திருந்தது. அந்த படம் விவசாய தொழிலாளர்களின் யதார்த்த வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் ஆவணப்படுத்தியதோடு சரஸ்வதியை விவசாயத்தின் பக்கம் கவனத்தை திருப்ப வைத்துவிட்டது.

“குறும்படங்களை தயாரித்தபோது மக்களுடன் நெருங்கி பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். அவர்களுடைய வாழ்க்கையை பற்றியும், அவர்கள் எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன்” என்கிறார்.

ஆந்திரா:

ஆந்திரமாநிலம் நாகர்ஜூனா சாகர் அணைக்கு அருகில் உள்ள நந்தி வனபார்தி கிராமத்தில் நிலம் வாங்கி விவசாய பணிகளை தொடங்கி இருக்கிறார். வறட்சி பூமியான அங்கு பயிர்சாகுபடி செய்வது சவாலான விஷயமாகவே இருந்திருக்கிறது. உலர் நிலப்பகுதிகளில் வளரும் தாவர வகைகளான பச்சை பயிறு, உளுந்து, ஆமணக்கு, பட்டாணி ஆகியவற்றை சாகுபடி செய்திருக்கிறார். வறட்சிக்கும் தாக்குப்பிடித்து வளரும் வேம்பு, மா மரங்களையும் வளர்த்து வருகிறார்.

“இப்போது கடும் வறட்சியை சந்திக்க வேண்டியுள்ளது. எனது தோட்டத்திலுள்ள ஆள்துளை கிணறுகளும் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய்விட்டன. எனினும் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்தி மாமரங்களை வளர்த்து விட்டேன். அதை பார்த்து பக்கத்து தோட்ட விவசாயிகள் ஆச்சரியப்பட்டார்கள். என்னை போல் அவர்களும் உலர் நில பயிர் சாகுபடிக்கும், இயற்கை விவசாயத்திற்கும் மாற தொடங்கி இருக்கிறார்கள். நானும் குறைவான முதலீட்டில் பயிர் சாகுபடி செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். விவசாயம்தான் நமது வாழ்க்கைக்கு ஆதாரம். அதனால் இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும்” என்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறார். 

Next Story