பால்: புரதம் அடங்கிய போதைப் பொருள்


பால்: புரதம் அடங்கிய போதைப் பொருள்
x
தினத்தந்தி 25 Jun 2017 10:23 AM GMT (Updated: 2017-06-25T15:52:55+05:30)

பலருக்கும் உணவாகிக்கொண்டிருக்கும் பால் இப்போது கலப்படத்தால் விவாதப் பொருளாகிக்கொண்டிருக்கிறது.

லருக்கும் உணவாகிக்கொண்டிருக்கும் பால் இப்போது கலப்படத்தால் விவாதப் பொருளாகிக்கொண்டிருக்கிறது. கூடுதலாக இன்னொரு தகவல், அதில் இயற்கையான போதைத்தன்மையும் கலந் திருக்கிறதாம். பாலில் இருக்கும் அந்த இயற்கை போதைப் பொருள் பசும்பாலில் மட்டுமல்ல, தாய்ப் பாலில்கூட இருக்கிறதாம்.

பாலை பருகுகிறவர்களுக்கு லேசான போதைத்தன்மை உருவாக, அதில் இருக்கும் ‘கோஸோமெனர்பின்’ என்ற வேதிப்பொருள்தான் காரணம். அதனால்தான் பலரும் தினமும் அதை பருகுகிறார்கள். டீ, காபி அல்லது வெறும் பால் எதையாவது குடித்தால்தான் சிலருக்கு உற்சாகம் வந்ததுபோல் இருக்கும். அதற்கு இந்த வேதிப்பொருளே காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

‘பால் பருகினால் தூக்கம் வரும். மனதில் ஒருவித அமைதி ஏற்படும். பழகிவிட்டால் பால் பருகாமல் இருக்கமுடியாது’ என்று சொல்லப்படுவதற்கு இந்த வேதிப்பொருள் உடலுக்குள் செல்வதுதான் காரணமாம்.

தாய்ப்பாலிலும் இந்த போதையை ஏற்படுத்தும் ரசாயனம் உள்ளது. அது குழந்தையையும், தாயையும் இணைக்கும் சக்தியாக திகழ்கிறது. குழந்தை தாய்ப்பாலை விரும்பிப் பருக இந்த போதைப் பொருள் உதவியாக இருக்கிறது. குழந்தைக்கு தாய்ப்பால்தான் சிறந்தது. குழந்தைக்கு தேவையான மிக அத்தியாவசியமான சத்துக்களுடன், அது தாங்கிக்கொள்ளும் அளவுக்கு அதில் போதை தரும் வேதிப்பொருளும் உள்ளது.

பசுவின் பாலிலும் அது காணப்படுகிறது. பசுவின் பால், அது ஈனும் கன்றுக்கானது. ஆனால் அந்த கன்றை துரத்திவிட்டு, நாம் அந்த பாலை கறந்து எடுத்து பயன்படுத்துகிறோம். பசும் பாலில் அந்த போதை ரசாயனம் இருக்க காரணம், அதை கன்று விரும்பிக் குடிக்கவேண்டும் என்பதுதான்.

இயற்கை கன்றுக்கு தேவையான அளவு போதையுடன் படைத்த பாலை, நாம் பிஞ்சுக்குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். இது தவறான நடைமுறை. குழந்தைக்கு அதிகமான பசும்பாலை கொடுக்கும்போது, போதை ரசாயனமும் அதிகமாக குழந்தையின் உடலுக்குள் சென்றுவிடும். அது குழந்தையின் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். சுவாசத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும். வயிற்றுப்போக்கு ஏற்படவும் காரணமாகும்.

பசும் பாலில் இருக்கும் புரோட்டின் எளிதாக ஜீரணமாகாது. அது ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்போது, குழந்தைகளுக்கு வயிற்று பிரச்சினையாக மாறும். ஆனால் தாய்ப் பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. மூளை வளர்ச்சிக்கான சக்தியும் அதில் நிறைய இருக்கிறது. பசும்பால் பருகும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி வேகமாக இருக்கும். ஆனால் மூளை வளர்ச்சி மிக நிதானமாகவே இருக்கும்.

மனித உடல் வளர்ச்சிக்கும், பிராணிகளின் வளர்ச்சிக்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்த வித்தியாசத்திற்கு தக்கபடியான மாற்றங்கள் அதன் பாலிலும் உள்ளது. அதனால் பசுவின் பாலை அதன் கன்றும், தாய்ப்பாலை குழந்தையும் பருகவேண்டும். அதுவே இயற்கைக்கு ஏற்புடையதாகும்.

பாலில் இருக்கும் போதைப் பொருள் ‘அபின்’ வகையை சார்ந்தது. அது வலியை தாங்கும் சக்தியை தரும். ஆழ்ந்த தூக்கத்திற்கும் கொண்டுசெல்லும். எல்லோரது உடலுக்கும் பால் ஒத்துக்கொள்வதில்லை. அப்படி ஒத்துக்கொள்ளாதவர்களின் உடலில், அதில் இருக்கும் போதைத் தன்மை அலர்ஜியாக மாறும். அதன் மூலம் வயிற்றுப்போக்கு, வாந்தி, சுவாசப் பிரச்சினை போன்றவைகள் தோன்றும். அதனால் தங்களுக்கு பால் பிடிக்காது என்று கூறுபவர்களுக்கு கட்டாயப்படுத்தி பாலை பருகச்செய்யாதீர்கள்.

பிரச்சினைக்குரியவற்றையும் தாங்கிக்கொள்ளும் சக்தி நமது உடலுக்கு இருக்கிறது. அதனால் ஓரளவு போதைப் பொருட்கள் உடலுக்குள் சென்றாலும் உடல் தாங்கிக்கொள்ளவேசெய்யும். அதன் அளவு அதிகரிக்கும்போதுதான் பக்கவிளைவு ஏற்படுகிறது.

‘குழந்தைகளுக்கு பசும் பால் ஒத்துக்கொள்ளாது என்றால், அதை தாய்ப் பால் கொடுக்கும் தாய் பருகலாமா?’ என்ற கேள்வி எழும். இது நியாயமான கேள்விதான். தாயார் பசும் பால் அருந்துவது, குழந்தைக்கும் போய் சேரத்தான் செய்யும். அதனால் தாய்மார்கள் பசும்பாலை அளவோடுதான் பருகவேண்டும். நிறுத்த விரும்பினாலும் உடனடியாக நிறுத்திவிடக்கூடாது. அளவை குறைத்து படிப்படியாக நிறுத்தவேண்டும்.

பாலில் இருந்து பாலாடைக்கட்டி தயார்செய்யப்படுகிறது. இதனை சேர்த்து பலவிதமான உணவுப் பொருட்களை தயார் செய்கிறார்கள். இதில் 70 சதவீதம் கொழுப்பு அடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிடுகிறவர்களுக்கு இதய நோய் தோன்றலாம். உடல்பருமன் பிரச்சினையும் உருவாகும். அமெரிக்காவில் கிட்டத்தட்ட ஒன்றே கால் கோடி சிறுவர், சிறுமியர்கள் பாலாடைக்கட்டியின் அதிக பயன்பாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வு ஒன்று வெளிப்படுத்துகிறது. குழந்தைகளுக்கு கொழுப்பை குறைக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அவர்கள் பீட்சா சாப்பிடுவதை கட்டுப்படுத்தவேண்டும். பீட்சாவில் நான்கில் ஒரு பங்கு பாலாடைக்கட்டி சேர்க்கப்படுகிறது. இதுதான் பீட்சாவுக்கு சுவை ஏற்றுகிறது.

பத்து லிட்டர் பாலில் இருந்து ஒரு கிலோ பாலாடைக்கட்டி தயார் செய்யப்படுகிறது. பாலில் இருந்து தண்ணீர் பிரித் தெடுக்கப்பட்டு, இதனை உருவாக்குகிறார்கள். இது அடர்த்தி நிறைந்த பொருள் என்பதால் அதிகப்படியான கொழுப்பை கொண்டிருக்கிறது. வழக்கமாக பாலில் இருக்கும் போதைப் பொருளைவிட, பாலாடைக்கட்டியில் அதிக போதைப் பொருள்தன்மை இருக்கிறது. அதனால்தான் பீட்சாவை மக்கள் மீண்டும் மீண்டும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

செயற்கையான கலப்படம் மட்டுமல்ல, இயற்கையாகவே பாலுக்குள் சில பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன என்பதை கவனத்தில் வைத்திருங்கள். 

Next Story