தமிழக–கர்நாடக எல்லையில் மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை புலி அடித்து கொன்றது


தமிழக–கர்நாடக எல்லையில் மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை புலி அடித்து கொன்றது
x
தினத்தந்தி 25 Jun 2017 9:45 PM GMT (Updated: 2017-06-25T22:11:59+05:30)

தாளவாடி அருகே தமிழக–கர்நாடக எல்லையில் மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை புலி அடித்துக்கொன்ற சம்பவத்தால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கும்டாபுரம் மலைக்கிராமம் உள்ளது. இந்த கிராமம் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் அமைந்து உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சங்கரப்பா (வயது 50). விவசாயி. இவர் 4 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய நிலம் கர்நாடக மாநிலம் ஒன்னேகவுடஹள்ளியில் உள்ளது.

எனவே இவர் தினமும் காலையில் தன்னுடைய மாடுகளை ஒன்னேகவுடஹள்ளியில் உள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். பின்னர் மாலையில் மாடுகள் மேய்ந்து விட்டு தானாகவே வீட்டுக்கு வந்து விடும்.

மாட்டை அடித்துக்கொன்ற புலி

இதேபோல் நேற்று முன்தினம் சங்கரப்பா தன்னுடைய மாடுகளை ஒன்னேகவுடஹள்ளிக்கு ஓட்டி சென்று மேய்ச்சலுக்கு விட்டு விட்டு வீட்டுக்கு திரும்பினார். ஆனால் மாலையில் 3 மாடுகள் மட்டுமே திரும்பி வந்தன. ஒரு பசு மாடு மட்டும் திரும்பி வரவில்லை. இரவு நேரமாகிவிட்டதால் மாட்டை சங்கரப்பா தேடி செல்லவில்லை.

இதைத்தொடர்ந்து நேற்று காலை சங்கரப்பா மற்றும் கும்டாபுரத்தை சேர்ந்த 5 பேர் ஒன்னேகவுடஹள்ளி பகுதிக்கு சென்று மாட்டை தேடி உள்ளனர். அப்போது அங்குள்ள வனப்பகுதியில் கழுத்தில் கடிபட்ட நிலையில் சங்கரப்பாவின் மாடு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மாட்டின் பின் பகுதியும் கடித்து குதறப்பட்டு இருந்தது. எனவே மாட்டை புலி அடித்து கொன்று உள்ளது என்ற முடிவுக்கு வந்த சங்கரப்பா, இதுகுறித்து கர்நாடக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பொதுமக்கள் பீதி

தகவல் அறிந்ததும் கர்நாடக வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாட்டை பார்வையிட்டு அங்கு பதிந்திருந்த கால் தடயங்களை ஆய்வு செய்தனர்.

அப்போது மாட்டை புலி அடித்து கொன்று உள்ளதை வனத்துறையினர் உறுதி செய்தனர். அதுமட்டுமின்றி மாட்டை அந்த புலி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்து சென்று உள்ளதும் தெரியவந்தது.

தாளவாடி அருகே மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை புலி அடித்துக்கொன்ற சம்பவத்தால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.


Next Story